இலங்கையிலான மனித உரிமைகள் நிலைமை குறித்து அந்நாடு தொடர்பான தனது நிலைப்பாடு தளர்த்தப்படமாட்டாது என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடக பிரிவொன்று அறிக்கையிட்டுள்ளது.
அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடரின் போது நியூயோர்க் நகரில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்த பின்னர் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இத்தகைய மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தன.
சரியாகக் கூறுவதென்றால் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின் இடைவேளையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இலங்கை ஜனாதிபதியுடன் உரையாடியமை மட்டுமே இங்கு இடம்பெற்றுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பஸகி மேற்படி செய்திகளுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் கூறினார்.
அவர் (கெரி) இதன் போது இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கை மாற்றமடையாது என்பதுடன் அது நிச்சயம் தளர்த்தப்படமாட்டாது என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்ததாக ஜென் பஸகி ஊடகவியலாளர்களின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் கூறினார்.
இருப்பினும் இலங்கையுடனான எமது உறவு சாத்தியமான பூரணத்துவ நிலையை எட்ட வேண்டும் என நாம் விரும்புகிறோம். ஆனால் இலங்கை தனது வேறுபட்ட இன மற்றும் மத சமூகங்களுக்கு நிலையான சமதானத்தையும் சுபீட்சத்தையும் கட்டியெழுப்பும் பட்சத்தில் மட்டுமே இது இடம்பெறும் என ஜென் பஸகி தெரிவித்ததாக பி.ரி.ஐ. ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அதன் காரணமாகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் இனிமேலும் போரில் ஈடுபடாது தனது அனைத்துப் பிரஜைகளையும் உள்ளடக்கி எதிர்காலத்தை கட்டியெழுப்பும் நாடொன்றாக அர்த்தமுள்ள முன்னடியெடுத்து வைப்புகளை எடுப்பது தேவையாகவுள்ளதாக இலங்கை ஜனாதிபதிக்கு நிச்சயமற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளாது தெளிவுபடுத்தியுள்ளார்.
















