சென்னை: நடிகர் ஷாருக்கானின் பத்திரிகையாளர் சந்திப்பை சென்னை மீடியாக்கள் புறக்கணித்துள்ளன.
பாலிவுட் ஹீரோ ஷாருக்கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், பொமன் இரானி போன்றோர் நடித்த ‘ஹேப்பி நியூ இயர்’ படம் வரும் அக்டோபர் 24ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகிறது. ஷாருக்கின் மனைவி கௌரி கான் ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற பேனரின் கீழ் இந்த படத்தைத் தயாரித்திருக்கிறார். இதற்காக பெரிய பட்ஜெட்டில் புரொமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ‘SLAM” என்ற பெயரில் அமெரிக்காவில் டூர், கூகுள், டுவிட்டர் தலைமை அலுவலகங்களில் உரையாடல் என பப்ளிசிட்டியில் பெஞ்ச்மார்க்காக இருக்கிறது இந்தப் படம். இந்தியாவில் முதல் புரோமொஷனல் நிகழ்ச்சிக்காக அவர்கள் வந்தது நம்ம சென்னைக்கு. ஆனால், பப்ளிசிட்டி யாருக்கு கிடைத்தது தெரியுமா?
‘ஹேப்பி நியூ இயர்’ பத்திரிகையாளர் சந்திப்பு அக்டோபர் 3ஆம் தேதி கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடத்த திட்டமிட்டு, அழைப்பிதழ் எல்லாம் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி விட்டார்கள். அழைப்பிதழில் நான்கு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அச்சிடப்பட்டு இருந்தது. ‘வருகிறவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டார்கள், செக்யூரிட்டியும் வெயிட்டாக இருக்குமே!’ என பிளானிங்குடன் 3 மணிக்கு முன்னரே பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராஃபர்கள் ஆஜராகி விட்டனர். எதிர்பார்த்ததுபோலவே, செக்யூரிட்டியும் ஸ்ட்ரிக்ட்டாகவே இருந்தது. ஐ.டி.சி. ஹோட்டல் செக்யூரிட்டி தவிர, இன்னொரு தனியார் செக்யூரிட்டி, போலீஸ் என பட்டையைக் கிளப்பியது பாதுகாப்பு.
‘செலிபிரிட்டினாலே லேட்டுதானே பாஸ், நாமெல்லாம் எவ்வளவு பார்த்துட்டோம்’ என ‘காத்திருந்து.. காத்திருந்து’ என மாலை 7 மணி வரை பத்திரிகையாளர்கள் காத்துக்கொண்டேயிருந்தனர். அவ்வப்போது ‘ஐ அம் வெயிட்டிங்’ என்ற ரீதியில் சில பத்திரிகையாளர்கள் டென்ஷன் ஆகிக்கொண்டிருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கான சிக்னலும் இல்லாததால், பொறுமையிழக்க ஆரம்பித்தனர் பத்திரிகையாளர்கள்.
தீடீரென்று சந்திப்பு நடக்கும் ஹாலில் இருந்து, ‘உள்ள ஃபைட் சார், ஃபைட்டு, ஃபைட்டு’ என ஓடிவந்தார் ஒரு புகைப்படக்காரர். ‘ஃபைட்டா? ரைட்டு ரைட்டு!’ என ஓடிப்போய் பார்த்தால், உள்ளே நிகழ்ச்சி அமைப்பாளர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார்கள் பத்திரிகையாளர்கள். ஒரே கூச்சல். ‘நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்’ என சொல்லப்பட, ‘அவ்வளவுதான் இனி வெயிட் பண்ண முடியாது, இது இரண்டாவது தடவை, ஏற்கனவே ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கான நிகழ்ச்சியிலும் இப்படித்தான் நள்ளிரவு வரை இழுத்தடித்தீர்கள்’ என கேமரா, வீடியோ யூனிட் என எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தனர் பிரஷர் ஏறிய பிரஸ் ஆட்கள். இது நடக்கும்போது மாலை 7. 15 மணி.
விஷயம் சீரியஸ் ஆவதை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உள்ளே ஷாருக்கிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அவர், 8 மணிக்கு வெளியே வந்து ‘முகத்தைக்’ காட்டினார். அதுவரை, ஒருவர்கூட நிகழ்ச்சி தாமதம் ஆவதற்கான காரணத்தை விளக்கவில்லை.
ஷாருக், பத்திரிகையாளர்களிடம் மிக மிக குறைவான வால்யூமில், ”விழா 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து முழுமையான தகவல்கள் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. உங்கள் ஒவ்வொருக்கும் தனித்தனியாக எக்ஸ்க்ளூசிவ் இன்டர்வியூ தருகிறேன். நீங்கள் கிளம்ப வேண்டுமா என்று யோசியுங்கள். ஒரு முடிவை எடுத்துவிட்டு சொல்லுங்கள், நான் காத்திருக்கிறேன்” என சொல்ல, ‘இங்கே 50க்கும் மேற்பட்ட மீடியா ஆட்கள் இருக்கிறார்களே! எப்படி ஒவ்வொருவருக்கும் தனித்தனி இன்டர்வியூ தரமுடியும்?’ என பத்திரிகையாளர்கள் சொன்னார்கள்.
அதைக்கேட்டுக்கொண்டு தள்ளிநின்று ‘இவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று பார்ப்போம்’ என பார்த்துக்கொண்டேயிருந்தார் ஷாருக்கான். அப்போது அவர் முகத்தில் இருந்த கோபத்தைப் பார்க்கவேண்டுமே! அப்பப்பா! இன்னொருபக்கம் ஷாருக் பேசுவதை யாரும் வீடியோ எடுக்க முடியாதபடி, கேமராமேன்களை தடுத்தவாறே இருந்தனர் செக்யூரிட்டிகள்.
இறுதியில், பத்திரிகையாளர்கள் மொத்தமாக நிகழ்ச்சியைப் புறக்கணிக்க, ஷாருக் கடுப்புடன் உள்ளே போய்விட்டார். தீபிகா, அபிஷேக் போன்ற கலைஞர்கள் எட்டிகூடப் பார்க்கவில்லை. அப்புறம் என்ன, ‘பத்திரிகைக்காரங்க வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா!’ என்று வீட்டுக்கு நடையைக் கட்டினோம்.
ர. ராஜா ராமமூர்த்தி
















