அமிலம் குடித்து மாணவி தற்கொலை முயற்சி – காதலன் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் கள்ளர் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகன் அருண்குமார் (வயது 21). திருப்பூர் வெள்ளியங்காட்டி உள்ள அவரது மாமா சுப்பிரமணி வீட்டில் தங்கி, மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அருண்குமாருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அருண்குமார் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக கூறியதின்பேரில் இருவரும் பல இடங்களுக்கு சென்றனர்.

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி காதலனிடம் கேட்டார். ஆனால் அருண்குமார் மாணவியை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் மனம் உடைந்த மாணவி வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு போராடிய மாணவியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் மகளை காதலிப்பதாக கூறி தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் மீது புகார் செய்தனர். கல்லூரி மாணவிக்கு 17 வயதே ஆவதால்போலீசார் காதலன் அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!