தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கிடையே முரண்பாடுகள் அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புௌாட் ஆகிய கட்சிகள் உள்ளன. ஆனால் இவ்வாறான பதிவினை மேற்கொள்வதற்கு கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி விரும்பவில்லை என்றே தெரிகின்றது.
தற்போது லண்டனுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும் என்று அறிவித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்வோம் என்ற வாக்குறுதியை நானோ எனது கட்சித் தலைவர்களோ ஒருபோதும் வழங்கவில்லை. கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்திருக்கின்றார்.
தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மாவை சேனாதிராஜா எம்.பி. கூட்டமைப்பு தொடர்பில் தெரிவித்துள்ள இத்தகைய கருத்தானது நிச்சயமாக கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது திண்ணமாகும். ஏனெனில், ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புௌாட், தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகளையே கூட்டமைப்பு உள்ளடக்கியுள்ளபோதிலும் வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி ஏற்கனவே முரண்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு எதிராக தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அறிக்கைகளை விடுத்து வருகின்றார். இதேபோல் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்குக் கூட கடிதமொன்றையும் அவர் அனுப்பிவைத்திருக்கின்றார்.
இந்த நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியை தவிர ஏனைய கட்சிகள் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகின்றன. கடந்த சில வருடங்களாகவே கூட்டமைப்பிற்கு யாப்பொன்று உருவாக்கப்படவேண்டுமென்றும் அந்த யாப்பின் அடிப்படையில் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவேண்டுமென்றும் ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த வருடம் இவ்விடயம் தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் ஏற்பாட்டில் கூட்டமொன்று நடைபெற்று அதில் பதிவு தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் பதிவுக்கான செயற்பாடுகளை மேற்கொள்வதில் இலங்கை தமிழரசுக்கட்சி இழுத்தடிப்புப்போக்கையே கடைப்பிடித்து வந்தது. இந்த நிலையிலேயே கூட்டமைப்பை பதிவு செய்யப்போவதில்லை என்று மாவை சேனாதிராஜா எம்.பி. லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அறிவிப்பு செய்திருக்கின்றார்.
கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம் பெற்றிருந்தது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.
இங்கு இடம் பெற்ற கலந்துரையாடலின்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் பொதுவான அடிப்படையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நோக்கவேண்டுமென கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஜனநாயக வழியில் இயங்கிக்கொண்டிருக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்க முடியாது என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.
முதலமைச்சரின் இத்தகைய கூற்றானது அந்தக்கூட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. முதலமைச்சரின் இந்தக் கூற்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஈ.பி. ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் முதலமைச்சரின் கூற்று எம்மை வன்முறையாளர்களாக சித்திரிக்கும் முயற்சியாகும். வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவுக்காக தற்போதைய முதலமைச்சரை நாடிய போது கூட்டமைப்பிலுள்ள ஒரு கட்சியினர் மட்டும் கேட்டால் போதாது. அனைத்துக் கட்சியினரும் கேட்கவேண்டுமென கோரியிருந்தார். இதற்கமைய கூட்டமைப்பின் தலைவர் எம்மோடு பேசி கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தினதும் சம்மதத்தை வெளியிட்டிருந்தார். இப்போது ஆயுதப்போராட்ட வழியில் வந்தவர்களாக எம்மை பார்க்கும் முதலமைச்சர் எதற்காக அப்போது பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் நாங்கள் ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக வழியில் இயங்கி வருகின்றோம். எங்கள் கட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் காலத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோதும் எங்களையும் இணைத்துக்கொண்டே புலிகள் கூட்டமைப்பை உருவாக்கினர். நிலைமை இவ்வாறு இருக்க 30 வருடங்களுக்கு முற்பட்ட எங்கள் வழியை சுட்டிக்காட்டுவது நடைமுறைக்கும் ஜனநாயகத் தன்மைக்கும் முரணானதாகவே இருக்கும். ஆயுதப் போராட்டம் தீண்டத்தகாததாகவும் அந்த வழியில் இருந்தவர்கள் தீண்டத் தகாதவர்களாகவும் அடையாளப்படுத்துவதாகவே முதலமைச்சரின் கருத்து உள்ளது. இது எமக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது. அவரது கருத்து தியாகங்களை கொச்சைப்படுத்துகின்றது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.
உண்மையிலேயே வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக சி.வி. விக்கினேஸ்வரனை அழைத்தபோது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து அழைத்தால் மட்டுமே வேட்பாளராக வர முடியும் என்று நீதியரசர் விக்கினேஸ்வரன் அன்று தெரிவித்திருந்தார். அதற்கிணங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்தே விக்கினேஸ்வரனை வேட்பாளராக நிறுத்தி இருந்தன.
ஆனால் தற்போதைய நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியை சார்ந்த வகையிலேயே முதலமைச்சரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இது குறித்து ஏனைய கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியபோதே முதலமைச்சர் இத்தகைய ஒரு கருத்தினை தெரிவித்திருக்கின்றார். இந்தக் கருத்தும் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்குப்பின்னர் பாராளுமன்றத் தேர்தலும் வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகளும் முறுகல் நிலையும் ஏற்படுவது என்பது தமிழ் மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒற்றுமையாகவும், ஒருமைப்பாட்டுடனும் இருக்கவேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். கடந்த வடமாகாணசபைத் தேர்தலில் 80 வீதமான வடமாகாண மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். கிழக்கிலும் இதே நிலையே காணப்பட்டது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு நிற்பதானது தமக்கு பலம் என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் கூட்டமைப்பில் அங்கும் வகிக்கும் கட்சியினர் மத்தியில் முரண்பாடுகள் ஏற்படுவதானது மக்களைப் பொறுத்தவரையில் கவலையான விடயமேயாகும். அரசியல் நோக்கங்களைக் கொண்டவகையிலான செயற்பாடுகளை தவிர்த்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமைகள் முயலவேண்டும். தற்போதைய நிலையில் இதுவே தேவையாக உள்ளது.
















