73வது வழக்காக ஜெயலலிதாவின் ஜாமீன் மனு.. விடுதலை கிடைக்குமா?.. இன்று விசாரணை!

jayalalithaஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதாவின் மனுக்கள் 73வது வழக்காக நீதிபதி சந்திரேசகரா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது. அதற்கு அடுத்த வழக்குகளாக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரினி் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. கடந்த 10 நாட்களாக சிறையில் அடைபட்டிருக்கும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே இன்றாவது ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் அதிமுகவினர் உள்ளனர்.

நீதிபதி சந்திரசேகரா பெஞ்ச் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனு, தீர்ப்பை ரத்து செய்யும் மனு ஆகியவற்றை இன்று விசாரிக்கவுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் ஜாமீன் கோரி கடந்த 29ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்கள் 30ம் தேதிக்கு விசாரணைக்கு வந்தன. நீதிபதி ரத்னகலா விசாரணை நடத்தினார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் யாரும் இல்லாத காரணத்தால் விசாரணையை அதிரடியாக அக்டோபர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி ரத்னகலா. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக வக்கீல்கள் உடனடியாக இந்த மனுவை விசாரிக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி டி.எச்.வகேலா தலையிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் அக்டோபர் 1ம் தேதி அதே நீதிபதி ரத்னகலா பெஞ்ச் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 1ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் விசாரணையே நடத்தாமல் 2 நிமிடங்களிலேயே வழக்கை ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கும் என்று கூறி விட்டு போய் விட்டார் நீதிபதி ரத்னகலா. இந்த பின்னணியில் இன்று ரெகுலர் பெஞ்ச் முன்பு ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. தசரா விடுமுறைக்குப் பின்னர் இன்றுதான் கர்நாடக உயர்நீதிமன்றமும் செயல்படத் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதாடவுள்ளார். அரசுத் தரப்பி்ல் பவானி சிங் ஆஜராகிறார்.

அவர் ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா சார்பில் வித்யாசாகர், மணிசங்கர் ஆகியோரும், இளவரசிக்கு அஸ்மத் பாஷா, அசோகன் ஆகியோரும், சுதாகரனுக்கு மூர்த்தி ராவ், சீனிவாசன் ஆகியோரும் ஆஜராகின்றனர். இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது என்று முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதிட்டவரான ஆச்சார்யா கூறியுள்ளார் என்பதால் ஜெயலலிதா 10 நாள் சிறைவாசத்தை விட்டு வெளியே வருவாரா என்று பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பலத்த பாதுகாப்பு ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதால், கர்நாடக உயர்நீதின்றத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோர்ட் மற்றும் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள சிறையைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply