”வன்முறை இயக்கங்கள்” விக்கி சொல்வது என்ன? – மாரீசன்

vikneswaran5இலங்கை அரசியலில் மஹிந்தராஜபக்ஷவுக்கும் ஏனையோருக்கும் இல்லாத சில தனித்திறமைகள் உண்டு. ஏனைய கட்சிகளைப் பதவிகளைக் காட்டி உடைத்து சின்னாபின்னப்படுத்துவதிலும் சிறுபான்மை இனங்களின் ஐக்கியத்தைச் சீரழித்து அவற்றைப் பலவீனப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே தான்.

அவ்வகையில் ஐ.தே.கட்சி, ஜே.வி.பி என்பவற்றை உடைத்து அவர்களின் அரசியல் பலத்தை நிர்மூலமாக்கினார். முஸ்லிம் கட்சிகளையும், மலையகத் தலைமைகளையும் ஐக்கியப்பட விடாது தங்களுக்குள்ளேயே மோதவைத்து அனைவரையுமே தனக்கு ஆதரவு தரும் நிலையை ஏற்படுத்தினார்.

ஆனால் அவரின் இந்தச் சதியை தமிழ் மக்களிடம் மட்டும் நிறைவேற்ற முடியவில்லை. ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் மூலம் தமிழ் மக்களின் ஐக்கியத்தைச் சிதறடிக்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டார் எதுவுமே பலனளிக்கவில்லை. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கி தமிழ் மக்களின் ஐக்கியத்தை உறுதிப்படுத்தினர்.

அதன் காரணமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்று தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் இலங்கைத் தமிழ் மக்களின் தலைமைச் சக்தியாக எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது மஹிந்த ராஜபக்ஷவின் இன அழிப்புக் கோட்பாட்டுக்கு ஒரு பெரும் தடைக்கல்லாக விளங்குகிறது. சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு கொடுக்கும் அதேயளவு கௌரவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கொடுத்துவருகின்றன.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் தேவை இலங்கை ஆட்சியாளர்களுக்கு வரவர அதிகரித்துக் கொண்டேபோகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் மஹிந்தவின் நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர் தலைமைகள் சில கங்கணம்கட்டி நிற்கும் வகையிலான செயற்பாடுகள் சில நாட்களாக நடைபெற்றுவருவதை அவதானிக்கமுடிகிறது.

அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் கூட்டமைப்பின் அங்கம்பெறும் கட்சிகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் ஏனைய கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.

கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் வன்முறை சார்ந்த பின்னணியைக் கொண்ட இயக்கங்கள் என்பதால் அவற்றுடன் சேர்ந்து செயற்படமுடியாது என பகிரங்கமாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் வாக்குகளைப் பெற்றார் என்பதும், தமிழரசுக்கட்சியின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை என்பதையும் ஏனோ வசதியாக மறந்துவிட்டார். எல்லாக்கட்சிகளும் சம்மதித்தால் மட்டுமே தான் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்ததும் இங்கு மறந்துவிட முடியாதது. எல்லாக்கட்சிகளின் ஆதரவுடன் தான் இவர் இவ்வளவு பெரும் தொகை வாக்குகளைப் பெற்றாரே ஒழிய தமிழரசுக்கட்சியின் வாக்குகளால் மட்டுமல்ல. அவருக்கு கிடைத்த வாக்குகளில் குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகளுக்குச் சொந்தக்காரர்கள் எமது இனவிடுதலைப்போருக்காக எதோ ஒரு வகையில் விலைகொடுத்தவர்கள் தான் என்பதை அவர் புரிந்திருப்பாரா?

அது மட்டுமல்ல தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் ஒரு மாவீரன் என்றும் மாவீரர்கள் போராளிகளின் தியாகங்களையும் சொல்லியுமே இவர் வாக்குக்கேட்டார்.

தேர்தலில் வெற்றிபெறத் தேவைப்பட்ட ஆயுதப்போராளிகள் இன்று அவருக்கு மனிதக் கொலைஞர்களாகத் தெரியவந்ததன் காரணம் என்ன? இன்று அவர் தன்னை தமிழரசுக்கட்சியாகத் தன்னை அடையாளப்படுத்துவது ஏன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் அங்கீகரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற வைக்கப்பட்ட பரந்துபட்ட அரசியல் ஐக்கிய முன்னணியான ஒரு கட்சி. விடுதலைப்புலிகள் இன்று களத்தில் இல்லாத நிலையில் எமது உரிமைப்போராட்டத்தின் அடுத்த கட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே கொடுத்துள்ளனர். நிச்சயமாக தமிழரசுக்கட்சியிடமல்ல. தமிழரசுக்கட்சியால் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை தனியாக முன்னெடுத்துச் செல்ல முடியாதென்பதாலேயே தமிழர் விடுதலைக்கூட்டணியை தந்தை செல்வா உருவாக்கினார். தமிழர் விடுதலைக்கூட்டணியால் போராட்டத்தை முன்கொண்டு செல்ல முடியாத நிலையிலேயே ஆயுதப் போராட்டம் வெடித்தது.

அந்த ஆயுதப் போராட்டத்தின் அரசியல் குழந்தையாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிறப்பெடுத்தது. வரலாறு இவ்வளவு தூரம் முன்னோக்கிச் சென்ற பின்பு தமிழரசுக்கட்சியை மேலெழவைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைக்க முயல்வது வரலாற்றுச் சக்கரத்தை பின்நோக்கி நகர்த்த முனையும் ஒரு முட்டாள்தனமாகும்.

இந்த முட்டாள்தனத்தை நிரூபிக்கும் வகையில் லண்டனில் மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது பற்றிக்குறிப்பிடும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கூட்டமைப்பே தவிர அது ஒரு கட்சியல்ல என்பதுடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை கூட்டமைப்பாக பதிவு செய்யமுடியாது என்றும் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தமிழரசுக்கட்சியின் திருமலை மாநாட்டின் போது சின்னக்கதிர்காமராக குறிப்பிடப்படுகின்ற சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஏற்கனவே கூட்டமைப்பின் பேச்சாளராக சுரேஷ் பிறேமச்சந்திரன் செயற்பட்டுவரும் நிலையில் தமிழரசுக்கட்சி இன்னொரு பேச்சாளரை நியமித்ததன் மூலம் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு மறைமுகமாக தமிழரசுக்கட்சி தமது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் செய்தி ஒன்றைச் சொல்லியிருப்பதாகவே தெரிகிறது.

எதிர்காலத்தில் தனியான வழி நோக்கியே தமிழரசுக்கட்சி பயணிக்கும் என்பதே அந்தச் செய்தி. இந்த இடத்தில் இரண்டு தரப்பும் தெளிவான முடிவினை பகிரங்கப்படுத்தவேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. தமிழரசுக்கட்சி இவ்வாறான குழப்பமான கருத்துக்களையும் திமிர்த்தனமாக நிலைப்பாடுகளையும் கடந்தகாலங்களிலும் எடுத்தே வந்திருக்கிறது. அந்தச் சந்தரப்பங்களில் மட்டும் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் கட்சிப் பதிவு தொடர்பில் தீவிரமாகக் கதைப்பதும் பின்னர் அந்த நடவடிக்கைகளை கைவிட்டுவிடுவதும் காலாகாலமாக நடந்து தான் வருகிறது. இப்போது ஏற்பட்டுள்ள புறச்சூழலை பயன்படுத்தி கூட்டமைப்பு என்கின்ற ஒரு வலுவான சக்தியை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் கைகோர்த்து தமது பலத்தினை வலுப்படுத்தவேண்டும்.

இதனிடையே விக்னேஸ்வரன் அல்லது மாவை சேனாதிராஜா போன்றவர்கள் தம்மை தமிழரசுக்கட்சியினராக வெளிப்படுத்துவதற்கு விரும்பினால், மக்களை ஏமாற்றாமல் தேர்தல் காலத்தில் விடுதலைக்காக வீழ்ந்தவர்களையும் தியாகங்களையும் பற்றியும் கதைப்பதை விடுத்து, பகிரங்கமாக தமது நிலைப்பாட்டினை அறிவிக்கவேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியை புறக்கணிக்கிறோம், ஆயுத வன்முறை நிராகரிக்கிறோம், எனவே நீங்கள் தமிழரசுக்கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பகிரங்கமாக மக்களிடம் நீங்கள் வாக்குகளுக்காக கையேந்திப் பார்க்கலாம்.

தற்போது கூட்டமைப்பில் உள்ள முன்னர் ஆயுதம் தாங்கிய கட்சிகளை வன்முறையாளர்களாகக் குறிப்பிடுவது ஈழவிடுதலைப்போராட்டத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப்புலிகளை நோக்கியதாகவும் அமையும். கடந்தகாலத்தில் தமிழரசுக்கட்சி செல்லாக்காசாகி இருந்த காலங்களில் ஈழவிடுதலைப்போராட்டத்தின் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்வின் வெளிப்பாடாக தற்போது மஹிந்த அரசு எதிர்பார்க்கும் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒரே எறியில் இரண்டு மாங்காய்கள் என்பதாக தமிழரசுக்கட்சி செயற்பட முற்படுவதாகவே பார்க்கமுடிகிறது.

இதனிடையே தமிழீழ விடுதலைப்புலிகளை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துவெளியிடும் எல்லாம் வல்ல விக்னேஸ்வரன், மறுநாள் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் புகழ்வதும் மாவீரர்களை புகழ்ந்து கருத்துவெளியிடுவதையும் தனது வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவ்வாறான நடவடிக்கை ஒரு இரு முறையல்ல பல தடவைகள் நடந்திருக்கின்றன. அவருடைய அவ்வாறான பச்சோந்தித்தமான மாறுபட்ட கருத்து வெளிப்பாடுகள் உள்நோக்கம் கொண்டவை என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்று அவர் எண்ணுகிறார் போலும். ஒருபோதும் உண்மைகள் உறைந்துபோய்விடுவதில்லை.. என்றாவது அவர் திரும்பிப்பார்த்தால்.. எமக்காக எமது மண்ணுக்காக கொடுக்கப்பட்ட பல்லாயிரம் உயிர்விலைகளின் சில துகள்களையேனும் உணர்ந்து கொள்ள முடியலாம்.

நன்றி

மாரீசன் (தமிழ்லீடர்)

Tags: , ,

Leave a Reply