மங்கள்யான் வெற்றியை கேலி செய்த கார்ட்டூன் வெளியிட்ட அமெரிக்க பத்திரிகை.

india-mars-mission-newyork-timesசெவ்வாய் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி உலகில் எந்த நாடும் செய்யாத சாதனையை செய்த இந்திய விஞ்ஞானிகளின் விஞ்ஞான அறிவை கேலி செய்வது போன்ற கார்ட்டூன் வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு பல இடங்களில் இருந்து கண்டனங்கள் குவிந்ததால் வேறு வழியின்றி நேற்று நியூயார்க் டைம்ஸ் இதழ் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல ஆயிரக்கணக்கான கோடிகளை செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அமெரிக்கா உள்பட பல நாடுகள் செலவு செய்துகொண்டிருக்கும் நிலையில் வெறும் ரூ.460 கோடி செலவில் இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி சாதனையை நிகழ்த்தி உள்ளது. இதனால் உலக நாடுகள் இந்தியா மீது பொறாமை அடைந்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ”தி நியூயார்க் டைம்ஸ்” விண்கலத்தை அனுப்பிய விஞ்ஞானிகளை இழிவுபடுத்தும் வகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. அந்த கார்ட்டூனில் ”Elite Space Club ” என்று எழுதப்பட்ட ஒரு ஆடம்பர அறைக்குள் பணக்காரர்கள், இந்தியாவின் சாதனை பற்றிய பத்திரிகையை படித்துக்கொண்டிருப்பதாகவும், அப்போது, பசு மாட்டை பிடித்துக் கொண்டு ஒரு விவசாயி அந்த அறையின் கதவை தட்டுவது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. அந்த விவசாயியை, ”இந்தியா” என்று பெயரிட்டு குறிப்பிட்டு இருந்தனர். இந்த கார்ட்டூனுக்கு நியூயார்க் டைம்ஸ் வாசகர்களிடம் இருந்து மட்டுமின்றி இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, அந்த பத்திரிகை தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக நேற்று அறிவித்தது. நியூயார்க் டைம்ஸ் தலையங்க ஆசிரியர் ஆன்ட்ரூ ரோசன்தால் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கூறியதாவது: விண்வெளி ஆராய்ச்சி, பணக்கார நாடுகளின் ஏகபோக உரிமை அல்ல என்று சித்தரிப்பதே அந்த கேலிச்சித்திரத்தின் நோக்கம். இந்தியாவை இழிவுபடுத்துவது நோக்கம் அல்ல. இதற்காக யார் மனதாவது புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.

Tags: , ,

Leave a Reply