அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிவரும் ‘அஜீத் 55′ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சியும், ஒரே ஒரு பாடலும் எடுக்கவேண்டிய நிலையில் திடீரென அஜித்திற்கு இயக்குனர் கவுதம் மேனனுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அஜீத் பொதுவாக இயக்குனரின் விஷயத்தில் தலையீடு எதுவும் செய்வதில்லை என்பது கோலிவுட்டில் அனைவரும் அறிந்ததே. ஆனால் இயக்குனர் என்ன செய்யபோகிறார் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார். படம் முழுவதும் விறுவிறுப்பாக இயக்கி முடித்துவிட்ட கவுதம் மேனன் கிளைமாக்ஸில் அஜீத்தின் கேரக்டர் என்ன ஆகும் என்பதை இன்னும் யாரிடமும் கவுதம் மேனன் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
அஜீத் இதுகுறித்து இயக்குனரிடம் கேட்டபோதும் கிளைமாக்ஸை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், மூன்று விதமான கிளைமாக்ஸ் மனதில் ஓடிக்கொண்டிருப்பதாகவும், அதில் எதை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்துவிட்டு சொல்வதாகவும் அஜீத்திடம் கவுதம் மேனன் கூறியுள்ளாராம். ஆனால் உண்மையில் கவுதம் மேனன் படத்தின் கிளைமாக்ஸை முடிவு செய்துவிட்டதாக உதவி இயக்குனர்கள் கூறுகின்றனர்.
தன்னிடம் கூட க்ளைமாக்ஸ் காட்சியை இயக்குனர் கூற மறுப்பதால் அஜீத் இயக்குனர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக கவுதம் மேனனின் கிளைமாக்ஸ் மற்ற இயக்குனர்களின் கிளைமாக்ஸ் இல்லாமல் கொஞ்சம் நெகட்டிவ்வாகத்தான் இருக்கும். வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் நன்றாக இருந்தாலும் அதன் க்ளைமாக்ஸ் விமர்சனத்துக்குள்ளானது. அப்படி ஒரு நிலை தனது படத்திற்கு வந்துவிடக்கூடாது என்று அஜீத் நினைப்பதாகவும் கூறப்படுகிறது. கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கும்போது அஜீத் எதிர்ப்பு தெரிவித்தால் படப்பிடிப்பு நிற்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஒருசாரார் கூறி வருகின்றனர். என்ன நடக்கப்போகின்றது என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
















