சேகுவேராவும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்…! – ச.ச.முத்து

che5சேகுவேரா இறந்து பன்னிரண்டு வருடங்களுக்கு (1979ல்) பின்னர் சேகுவேரா மரணித்த இடத்தினின்று நீண்ட சமுத்திரங்களையும் கண்டங்களையும் கடந்து ஏறத்தாழ 17000கிமீ தூரத்தில் இருக்கும்
மாங்குளத்தின் அடர்காட்டினுள் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் பண்ணை முகாம் ஒன்றின் இருள் நிறைந்த கொட்டிலுக்குள் ஒரு லாந்தர் வெளிச்சத்தில் சே எழுதிய “கெரில்லா யுத்த முறைமைகள்” என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை சில போராளிகள் படித்தபடி அதனை விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுவும் கைகளால் எழுதப்பட்ட தமிழாக்கம் அது.அப்பியாசக் கொப்பி ஒன்றில் எழுதப்பட்டிருந்தது.

எப்படி சேகுவேராவால் தான் மறைந்தும் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் மானுடவிடுதலை போராளிகளின் ஆதர்ச மனிதனாக திகழ்கிறான். எப்படி முடிகிறது..

1979ல் மட்டுமல்லாமல் இன்று வரைக்கும் சேகுவேரா இந்த உலக சரிதத்தின் திசைவழியை எவ்வாறு உலுப்பியபடி இருக்கின்றான் என்று பார்ப்போம் – எமது போராட்டத்தினுள்ளும்..

இன்றைக்கு சேகுவேரா மரணித்து நாற்பத்திஏழு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

பொலிவியாவின் ஒரு அடர்காட்டிடை இருந்த லா ஹிகுவரா என்ற கிராமத்து பள்ளிக்கூடத்தின் ஒரு அறையில் இதே அக்டோபர்9ம்திகதி சேகுவேரா என்ற புரட்சியாளன் கொல்லப்பட்டு இன்று நாற்பத்தி ஏழு வருடங்கள் ஆகிவிட்டன.

இன்றும்கூட ஏதோ ஒரு ஆசியநாட்டினதோ,ஆப்பிரிக்க நாட்டின் பெயர் வாய்க்குள் நுழையவே கடினமான சிற்றூரின் போராட்டத்திலோ ஏந்திய கொடிகளிடையே சேகுவேராவின் முகம் பொறித்த பதாகையோ, கொடியோ, ஏன் ரீசேர்ட்டோ காணப்படுகிறதே..எப்படி அவன் இல்லாமல் போவான்… இங்கு மேற்குலத்தில்கூட சேகுவேரா ஒரு அதிமானுடனாகவே நோக்கப்படுகின்றான்.

இத்தனைக்கும் சேகுவேரா பற்றி எதிர்மறையான நிறைய புத்தகங்கள் வெளிவந்த பின்னரும்கூட அவனின் இடம் என்பது இன்னமும் நகர் நடுவே நீண்டு உயர்ந்து நிற்கும் பெரும்பாறைபோல நிலைத்திருக்கிறது என்றால் சேகுவேராவின் வாழ்வுதான் அவர்விட்டு சென்றிருக்கும் உண்மையான செய்தியாக இன்றுவரை இருக்கிறது..

சேகுவேரா மரணிக்க முன்னர் தன்னை சுடுவதற்காக ரைபிளை நீட்டிய இராணுவத்தினனை நோக்கி கூறிய ‘கோழையே சுடு,நீ சுடுவது சேகுவராவை அல்ல.ஒரு சதாரண மனிதனைதான்’ என்று கூறியது எத்தனை சத்தியமான வார்த்தை என்பது இன்றுவரை எவராலும் சுட்டுபொசுக்க முடியாத சேகுவேராவின் புகழே சாட்சி.

இந்த உலகின் இளையோர் மத்தியில் இத்தனைதூரம் ஆளுமை செலுத்திய ஒரு மானுடன் வேறு எவரும் இருந்திருக்கமுடியாது…இது தலைமுறைதலைமுறையாக இன்னும் தொடர்வதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். அநீதியை கண்டு கொதித்தெழுந்தாலும் நீயும் என் தோழனே என்றும்

உலகில் அடிமைப்பட்டு கிடக்கின்ற அனைத்து நாடுகளும் என் தாய்நாடு என்றும் கூறியதும் வெறும் வசனமாக உலக விடுதலைப் போராட்டங்கள் எடுத்துக் கொள்ளவில்லை..சேகுவேராவின் காலத்துக்கு பின்னர் எழுந்த மக்கள் எழுச்சிகள், விடுதலைப் போராட்டங்கள் அனைத்திலும் சே யின் ஆளுமையும் அவரை உதாரணமாக கொள்ளும் தன்மையும் நிறைந்தோடி இருந்தன – இன்னமும்.
எங்களது தமிழீழ விடுதலைப் போராட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல…

தேசியத்தலைவர் தனது இளம்பருவத்திலேயே போராட்டத்துக்கு வந்தபோது அவருக்கு முன்பாக எந்தவொரு திசைகாட்டும் பலகைகளோ, வழிகாட்டிகளோ இருக்கவில்லை..அவர் முன்பாக இருந்தவை தமிழருக்கான விடுதலைக்காக போராடவேண்டும் என்ற உந்துதலும், வீரமும், அதற்காக மரணத்தைக்கூட சந்திக்க தயாரான ஈகமும்தான். போராட்டமுறை என்று பார்த்தால் அவருக்கு முன்பாக இருந்தவை இலக்கியங்களே..வரலாறுகளே..

ஆம்,சரித்திரத்தினின்றே அவர் கற்றுக் கொண்டார். இந்தியாவின் விடுதலைக்காக இந்திய தேசிய இராணுவத்தை கட்டி அமைத்த சுபாஸ் சந்திரபோசின் வரலாறு என்பது ஒரு இலட்சியத்துக்காக எப்படி ஒரு அமைப்பை கட்டிஅமைக்கலாம் என்று கற்றுக்கொள்ள கூடியதாக இருந்ததே தவிர ஒரு பேரினவாத இராணுவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தை எதிலிருந்து ஆரம்பிப்பது என்ற தகவல்கள் அங்கு குறைவாகவே இருந்தன..

அதிலும் ஓர் இரண்டு பேர்களே இருந்த இரகசிய போராட்ட அமைப்பு ஒன்று எவ்வாறு ஒரு போராட்டத்தை ஆரம்பித்து படிப்படியாக நகர்த்த வேண்டும் என்ற தகவல்கள் நிறைந்ததாக சேகுவேராவின் வாழ்க்கை வரலாறே இருந்தது. அதிலும் சே தனது அனுபவங்களை எழுதிய கொரில்லா போர்முறை என்ற புத்தகம் ஏராளம் நுணுக்கமான நகர்வுகளை, எதிரியின் மனோபலத்தை படிப்படியாக சிதைத்து அதிலிருந்து ஒரு மக்கள் எழுச்சிக்கு வித்திடும் பொறிமுறைகள் அந்த புத்தகத்தில் இருந்தன.

இப்படியாகத்தான் இந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுள் மெல்ல மெல்ல நுழைந்து பின் யாவுமாகி நின்றதுதான் சேகுவேராவின் ஆளுமை.

ஆரம்ப நாட்களின் ஒவ்வொரு கணப்பொழுதிலும் சேகுவேராவே ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாமல் வழிகாட்டுவது போல ஒரு காட்சி. ஏனெனில் அனைத்து போராளிகளும் தலைவர் உட்பட சேகுவேராவின் வரலாற்றினுள்ளும் அவரது போராட்ட முறைகளினுள்ளும் முழுதாகவே ஆகர்சிக்கப்பட்டிருந்தனர்.

சேகுவேரா தனது கொரில்லாப் போர் முறையிலும் தனது டைரியிலும் எழுதி இருந்த .30 காபைன் (.30 carbine ) என்ற ரைபிள்கூட எப்படியோ தலைவரால் அலைந்து திரிந்து வாங்கப்பட்டிருந்தது.

அது மட்டுமல்லாமல் சே எழுதி இருந்த மொலோரோவ் கொக்ரெயிலை (Molotov Cocktail) எப்படி வேட்டை துப்பாக்கி சன்னத்துள்ளிருந்து சுடமுடியும் என்ற ஆராய்வுகள் வேறு அந்த நேரத்திலேயே கலா, கிட்டு, செல்லக்கிளி அம்மான் போன்றவர்களால் நிகழ்த்தப்பட்டிருந்தன. மிகவும் ஆச்சரியமான உள்நுழைவு சேயினுடையது.

எங்கோ பிறந்து கியூபா என்ற தேசத்தின் விடுதலைக்காக போராடி அமைச்சராகி அதன்பின் அனைத்து பதவிப் பொறுப்புகளையும் துறந்து தோளில் மீண்டும் ஏந்திய துப்பாக்கியுடன் கண்டங்கள் கடந்தும் ஆபிரிக்கா, ஆசியா என்று விடுதலைக்காக அலைந்த அந்த மனிதன் எந்த காலத்துக்கும் உரிய முறைமைகளையே விட்டுச் சென்றிருக்கிறான்.

இதனையே கிட்டு அழகாக அடிக்கடி கூறுவார். சேகுவேராவின் முறைமைகளால் தான் குறைந்தளவு போராளிகளை வைத்துக் கொண்டு யாழ். மாவட்டத்தை மீட்க முடிந்தது என்று.. சேகுவேரா எழுதிய கொரில்லா போர்முறை என்ற புத்தகத்தில் ஒரு இடம் வரும். அதில் மிக சுவாரசியமாக ஒரு மனோபல ரீதியான தகவலை எழுதியிருப்பார்.

எதிரிகளுக்கு எப்போதும் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்க வேண்டுமாம்.புரட்சியாளர்கள்,விடுதலைப்போராளிகள் தம்மை சுற்றி வளைத்து நிற்கிறார்கள் என்று.

இந்த மனோநிலை தொடர்ச்சியாகி ஒரு கட்டத்தில் விட்டோடும் மனோநிலைக்கு எதிரிராணுவம் வரும் என்று.

இதனையே கிட்டு மிகவும் நுட்பமாக செயற்படுத்தினார்.உண்மையான சூட்டுக்கு இடையினில் அல்லது நள்ளிரவின் நிசப்தத்தில் பலாலிக்கு அண்டிய பகுதியில் ஏராளம் வெடிகளை கொழுத்தி எதிரிகளின் மனோநிலையை ஒரு கிலிபடர்ந்ததாக வைத்திருந்தார்.முகாமை விட்டு வெளியேவந்த ராணுவத்துக்கு எதிராகவும் இதுவே யுக்தியானது.

சேகுவேராவின் வீட்டினில் 3000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன என்பதும், சே ஒரு ஆழமான வாசிப்பு அனுபவம் மிகுந்தவர் என்பதும் அத்துடன் பல்லாயிரம் கிமீ தூரம் மோட்டார் சைக்கிளில் கடந்து பயணித்து மக்கள் மீதான பற்றும் அதிகமானவர் என்பதும் சேகுவேராவின் படைப்புகளிலும் அவர் சொல்லிய போராட்ட முறைகளிலும் காணப்பட்டதாலேயே அவர் இன்றுவரை போராளிகள் அவர்கள் எந்த நிறத்தவாராயினும், எந்த மதத்தவராயினும், எந்த இனத்தவராயினும் அவர்களால் ஆழமாக நேசிக்கப்படுகிறார்.

இந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால போராளிகள் அனைவருள்ளும் சேகுவேரா என்ற பெயரும் அவரது வாழ்வும் முறைமைகளும் தினசரி நகர்வுகள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வடிவத்தில் தொடரத்தான் செய்தது.கிட்டு மட்டுமின்றி சீலன், சந்தோசம் மாஸ்ரர், மூதூர் தளபதி கணேஸ், புலேந்திரன் என்று அனைவரும் சேகுவேரா ஐ தினமும் வாசித்தார்கள்.

ஏன்,ஒரு தாக்குதலும் அதன் பின்னரான உரிமை கோரலும் என்று துண்டுப்பிரசுரம் அடிப்பதிலாகட்டும், அதன் பின்னர் மக்கள் மத்தியில் சென்று வேலை செய்வதிலாகட்டும் சேகுவேராவின் வழிகாட்டுதலும் தாக்கமும் அதிகளவிலேயே இருந்தன.

சேகுவேரா இந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப பொழுதுகளில் இருந்து இதன் ஆயுதப் போராட்ட முறைமையை வடிவமைத்ததில் இருந்து அதன் தத்துவதளத்தின் செழுமைக்கும் நிறைவே சேகுவேரா எடுத்தாளப்பட்டும், மேற்கோள் காணப்பட்டும் உள்ளார்.

சேகுசேவரா ஒருமுறை மிகவும் உணர்வு நிலைப்பட்டு சொன்ன ஒரு வாசகமான ‘ எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கின்றதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் ‘ என்பதன் உண்மை அர்த்தமே இதுதான்.

இதன் ஒரு தாக்கமாகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரை அவர்களின் கொழும்பு நீதிமன்ற பிரகடனமான ‘ நாம் வன்முறைமீது காதல் கொண்ட மன நோயாளிகள் என்பதில் ‘

“எமது நோக்கம் விசாலமானது. ஆப்பிரிக்க கண்டம் என்றால் என்ன,லத்தீன் அமெரிக்க நாடு என்றால் என்ன எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்கு போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது’ என்று உரத்து சொன்னது சேகுவேராவின் வாசகத்தின் எதிரொலியே..

அதைப் போலவே “நான் தோற்றுப் போகலாம்.அதன் அர்த்தம் வெற்றி சாத்தியம் அற்றது என்பது அல்ல என்று சேகுவேரா சொன்ன வாசகத்தின் இன்னொரு வடிவம்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு உன்னத போராளி சொன்ன ‘ நான் சாகலாம், நீ சாகலாம்..ஆனால் நாங்கள் சாகக்கூடாது ‘ என்பதாகும்..

ஒரு துப்பாக்கிகூட இல்லாத பொழுதில் இருந்து குப்பைமேட்டில் கிடைக்கின்ற பொருட்களில் இருந்து வெடிப்பு செய்வதில் இருந்து ஒரு பெரும் மரபுவழி இராணுவத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்ற முறைமைகள் வரைக்கும் சேகுவேரா நிறையவே பாடங்களை எதிர்காலத்துக்கு தனது வாழ்வின் ஊடாக விட்டு சென்றுள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் அவற்றை முழுமையாகவே தனது வளர்ச்சிக்கு மக்கள் எழுச்சிக்கு பயன்படுத்தி இருக்கின்றது..இது போதும் அந்த புரட்சியாளனுக்கு…

சேகுவேராவில் இருந்து நிறையவே எடுத்துக் கொள்ளலாம்..யார் கண்டார்கள் நாளைய போராட்டத்தின் இன்றைய சிறு நெருப்பு ஒன்று அன்று போலவே இப்போதும் சேகுவேராவை படித்துக் கொண்டிருக்கலாம். என்ன ஒரு வித்தியாசம். சேகுவேரா எழுதிய கெரில்லா போர்முறை புத்தகத்தின் கைகளால் எழுதப்பட்ட பிரதியை அப்போது லாந்தர் வெளிச்சத்தில் எம் போராளிகள் படித்தார்கள். இப்போது இலத்திரனியல் ஊடகத்தில் படித்துக் கொண்டிருக்கலாம்.

எது எப்படியாயினும் அரசுகளின் அடக்குமுறை, பேரினவாதிகளின் இனக்கொலை, என்பனவற்றுக்கு எதிராக போராட வேண்டிய தேவை உள்ளவரை சேகுவேரா என்றென்றும் வாழ்வார்.

-ச.ச.முத்து-

Tags: ,

Leave a Reply