முதல்வர் என்ற பதவிக்குரிய முழுமையான அந்தஸ்தும், கெளரவமும், ஓ.பன்னீர் செல்வத்திற்குக் கிடைத்தது போலத் தெரியவில்லை. அவரை முதல்வராக தமிழக அரசு கருதுவது போலவும் தெரியவில்லை. அவரது பெயரைக் கூட போடாமல் வெறும் முதல்வர், முதலமைச்சர் என்று மட்டுமே போட்டு அரசு அறிக்கைகள், அறிவிப்புகள் வெளியாவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பெயருக்கு முன்பு ஏகப்பட்ட அலங்கார வார்த்தைகள் இருக்கும். ஆனால் பன்னீர் செல்வத்துக்கோ, அவரது பெயரைக் கூட போடமல் அறிக்கைகளை அரசு வெளியிட்டு வருகிறது.
வழக்கமாக அதிமுகவினர் ஜெயலலிதா பெயரைச் சொல்வதே இல்லை. அதற்கு மாறாக மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா என்றுதான் நீட்டி முழங்குவார்கள்.
அதேபோல ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிகாரிகள், மாண்புமிகு முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா என்று நீட்டாக சொல்வார்கள். அறிக்கையிலும் இந்த ஆர்டர் தெளிவாக இருக்கும்.
அவரது பெயரை ஓ.பன்னீர் செல்வம் என்று சொல்வதேயே அறிக்கைகளில் தவிர்க்கிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை.
ஒருவேளை அறிக்கை இப்படி இருந்தால் போதும் என்று ஓ.பன்னீர் செல்வமே கூறியிருக்கிறாரா என்று தெரியவில்லை.
அதேபோல முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர்ப் பலகை கூட தலைமைச் செயலகத்தில் இல்லை என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. பன்னீர் செல்வத்தின் அரசு வீட்டிலும் கூட அப்படி பெயர்ப் பலகை மாட்டவில்லை என்கிறார்கள்.
ஜெயலலிதா சிறைக்குப் போனதற்குப் பின்னர் அவரை முதலமைச்சர் என்று கூப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் ஜெயா டிவியில் அதிரடியாக அவரை மக்கள் முதல்வர் என்று கூப்பிட ஆரம்பித்து இன்று வரை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள்.
அப்படியென்றால் ஓ.பன்னீர் செல்வம் செவ்வாய் கிரகவாசிகளுக்கு முதல்வரா?
















