ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவின் யாழ்ப்பாணத்திற்கான வருகை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீதிகளில் இராணுவத்தினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சோதனைகளும் இடம்பெற்று வருகின்ற அதே வேளையில் அவசர அவசரமான புனரமைப்பு வேலைகளும் மறுபுறம் நடைபெற்று வருகின்றன. ஏதிர்வரும் 12,13, ஆம் திகதிகளில் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ வடக்கிற்கு விஐயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது ரயில் சேவை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் யாழ்ப்பாணத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்குரிய ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ரயில்வே புனரமைப்புப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரயில்வே கடவைச் சந்திகள் மற்றும் தண்டவாளங்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே இரானுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் ஐனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகள் இடம்பெறும் பிரதேசங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஐனாதிபதி செல்லும் வீதிகள் உள்ளிட்ட பிரதான மற்றும் சிறு சிறு குறுக்கு வீதிகளிலும் இரானுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய நிகழ்வுகள் இடம்பெறுகின்ற பகுதிகளுக்கு அருகில் இருக்கின்ற வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றில் உள்ளவர்களின் பெயர் விவரங்களும் திரட்டப்படுவதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறு பாதுகாப்புப் பணிகளில் இராணுவமும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்ற அதே வேளையில் புனரமைப்புப் பணிகளும் மறுபுறம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
















