வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் 40 நாட்களாக அதிபர் மாளிகையை விட்டு வெளியே வரவில்லை. அவர் உடல்நிலை சரியில்லை என்று அவ்வப்போது கூறப்பட்டாலும், அவருக்கு உண்மையில் என்ன ஆனது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. அவர் கடைசியாக செப்டம்பர் 3ஆம் தேதி தனது மனைவியின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதன்பின்னர் அவர் அதிபர் மாளிகையைவிட்டு வெளியே வராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி வடகொரியாவின் பகைநாடான தென்கொரியா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட கொரியாவில் இருந்து வடகொரியா, தென்கொரியா என இரு நாடுகளாக பிரிந்தது. தற்போது அதிபராக இருக்கும் கிம் ஜான் அன் என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் ஆட்சி புரிந்து வருகிறார். வடகொரியாவை இவரது குடும்பம்தான் பரம்பரை பரம்பரையாக ஆட்சி புரிந்து வருகிறது. இவரது குடும்பம் மீது வடகொரிய மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
இந்நிலையில் கிம் ஜான் அன் திடீரென உடல்நலமின்றி இருப்பதாக தகவல்கள் வந்ததை அடுத்து அவர் அதிபர் மாளிகையிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வதாக தகவல்கள் வெளிவந்தன. அவரது தொழிலாளர் கட்சியின் 69–வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டபோது கூட அவர் மாளிகையை விட்டு வெளியே வராதது பொதுமக்களுக்கு பெருத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில் வடகொரிய அதிபர் காணாமல் போனதாக ஒரு திடுக்கிடும் தகவல் நாடு முழுவதும் பரவி வருகிறது
2 மாதங்களுக்கு மேலாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருப்பதால் இந்த வதந்தி கிளம்பியுள்ளதாகவும், இதை பயன்படுத்தி பக்கத்து நாடுகள் தாக்கக்கூடும் என்றும் பரவலாக பேசப்படுகிறது. இருந்தாலும், வடகொரியாவின் ஆட்சி இன்னும் அவரது கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாக நம்புவதாக தென் கொரியா கூறுகிறது.
















