வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் (CCTMS) நுழைவாயில் திறப்புவிழா.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் தியாகராசா, இந்திரராசா ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் (CCTMS) நுழைவாயில் கடந்த 10.10.2014 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது உரையில்,
வன்னி மாவட்டத்திலேயே முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை வவுனியா
இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையாகும். நூற்று முப்பத்தாறு வருடங்கள் பழமை வாய்ந்த இப்பாடசாலையில் கடந்த இருபது வருடங்களாக ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றி எதிர்வரும் 21.10.2014 அன்று ஓய்வுபெறவுள்ள திருமதி தர்மகுலசிங்கம் அவர்களுக்கும், ஆசிரியர் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அவரது கணவர் தர்மகுலசிங்கம் ஐயா அவர்களுக்கும் இவர்கள் இருவரும் கல்விச்சமுகத்துக்கு ஆற்றிய பணிகளுக்காக வன்னி மக்களின் சார்பிலும், பாடசாலையின் சமுகத்தின் சார்பிலும் நன்றிகளையும் பாராட்டுகளையும் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
தற்போது இந்த பாடசாலை அனைத்து வளங்களையும் கொண்ட ஒரு பாடசாலையாக செயற்படுவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கிராம புறங்களைச்சேர்ந்த பிள்ளைகளுக்கு இந்த பாடசாலையில் கற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், இங்கு கற்கும் மாணவர்களை எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடியவாறு தயார்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அதிபர் ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி, பெற்றோர்களுக்கும் உண்டு.
ஆகவே ஒவ்வொரு பெற்றோர்களும் பாடசாலையோடும் அதிபர் ஆசிரியர்களோடும் நெருக்கமான நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உங்கள் பிள்ளைகளின் வகுப்பாசிரியருடன் உங்கள் பிள்ளைகளின் கல்வி நிலைமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் அவர்களை வழி நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபர் திருமதி தர்மகுலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர்களான தியாகராசா, இந்திரராசா ஆகியோரும், வவுனியா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, வவுனியா தெற்கு கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, பொருளியலாளர் எஸ்.சிவகுமாரன், பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி மாணிக்கவாசகம், கணேசலிங்கம், வலய பிரதிநிதி வசந்தி குலராசா, பாடசாலையின் பிரதி அதிபர் ஜெரோம் பிரதாபன் ஆகியோரும் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
















