வேகாத பருப்பு

election-fingerஅடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைத் தீவு மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கப் போகிறது. ஆயினும் அது நாடாளுமன்ற தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது ஆட்சியிலுள்ள மஹிந்த கூட்டணிக்கு மட்டுமே தெரியும்.

அவ்வாறான ஒரு நிலையில் மஹிந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பதவியில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் “ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நாம் விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதே பொருத்தமாக இருக்கும்” என்று அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

காலத்துக்கு காலம் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதே அதனுடன் போய் ஒட்டிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த தேர்தல் காய் நகர்த்தலுக்கான முன் ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்து விட்டது.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறை பல தசாப்தங்களைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகள் மாத்திரமல்லாது முஸ்லிம்கள் மீதும் அதிகாரத்தின் கரங்கள் படர ஆரம்பித்து விட்டன. முஸ்லிம் மக்களுக்கு எதிரான பெளத்த பேரினவாதத்தின் அடக்குமுறைப் போர் அட்டகாசமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த அராஜகத்தில் சில உயிர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டும் விட்டன. எனினும் இதனை அரசாங்கத்தில்அங்கம் வகிக்கும் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சரும் தட்டிக் கேட்கவில்லை. அதற்கான தைரியம் அவர்களுக்கு இருக்கவுமில்லை. அரசுக்கு குனிந்து குனிந்து சேவகம் செய்வதால் தமக்கு முதுகெலும்பு இருப்பதையே பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் மறந்து விட்டார்கள்.

இவ்வாறான நிலையில் அரசில் வீற்றிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு முஸ்லிம் மக்கள் கொடுத்த முதல் பரிசு ஊவா மாகாணசபைத் தேர்தலில் வெளிப்பட்டுள்ளது.

இவ்வாறான அதிர்ச்சி வைத்தியங்கள் இனிவரும் தேர்தல்களிலும் முஸ்லிம் கட்சிகளுக்கு கொடுக்கப்படலாம் என்ற அச்சம் அரசியல்வாதிகளிடையே தோன்றிவிட்டது. இனியும் முஸ்லிம் தலைமைகள் அவிழ்த்து விடும் பொய் மூடைகளை நம்புவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இல்லை என்பதையே அவர்கள் ஊவா தேர்தலில் முஸ்லிம் கட்சிகளை படுதோல்வி அடையச் செய்ததன் மூலம் உணர்த்தியுள்ளார்கள். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்ற நிலையில் தங்களுடைய அரசியல் இருப்பை தக்க வைக்க ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளார்கள்.
இந்த நிலையில் தான் விரைவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திட்டம் மஹிந்தவுக்கு இருப்பதாக ஊகங்கள் கசியத் தொடங்கின.ஆனால் அப்படி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் இப்போதும் அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகள் மஹிந்தவை ஆதரித்தே களத்தில் இறங்க வேண்டியிருக்கும்.முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் உக்கிரமடைந்திருக்கும் காலத்தில் அதைப் பற்றிய எந்த அக்கறையுமின்றி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு ஆலவட்டம் பிடிக்கும் அரசியல்வாதிகளை முஸ்லிம் மக்கள் நிரந்தரமாக நிராகரித்து விடும் நிலை இருக்கிறது. இதை சரிவர உணர்ந்து கொண்டு தான் முதலில் நாடாளுமன்ற தேர்தலை வைக்க வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போதே கூக்குரலிடத் தொடங்கிவிட்டார்கள்.

ஏனெனில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, வழமை போன்று அரசாங்கத்தினை பற்றி விமர்சித்து வாக்கு வங்கியை நிரப்பி சில ஆசனங்களை தனதாக்கி கொண்டு விடும். அதற்கு மாறாக ஜனாதிபதி தேர்தல் நடந்த பின்னர் நாடாளுமன்ற தேர்தல் வந்தால்,””மஹிந்தவை ஆதரித்து விட்டு இப்போது வாக்குகளுக்காகவா வேடம் போடுகிறீர்கள்?” என்று முஸ்லிம்கள் இவர்களை நிராகரித்து விடுவார்கள்.

முதலில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தாஙல் எதிர்ப்பரசியல் பேசி சில ஆசனங்களை கைப்பற்றி பின்னர் மீண்டும் அரசோடு ஒட்டி அமைச்சுப் பதவிகள் மூலம் ஏதாவது லாபம் பார்க்க முடியும்.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக சில வேலைகளில் முஸ்லிம் காங்கிரஸ் இறங்கியிருக்கிறது. அரசில் இருந்து வெளியேறப்போவதாகவும் கூட்டமைப்போடு பேச்சுக்களில் ஈடுபடப் போவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் திடீர் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் திருவிளையாடலே இது என்பதை உணராத இனவாத கட்சிகள் “”முஸ்லிம் காங்கிரஸும் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து தனி அரசை நிறுவப் போகின்றன” என்று கூக்குரல் இடுகின்றன. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தனியரசு அமைக்க உதவும் என்பதைப் போன்ற உலகமகாப் பகிடி வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த உண்மை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். எனவே எந்தத் தேர்தல் முதலில் நடந்தாலும் முன்னரைப் போல முஸ்லிம் காங்கிரஸின் பருப்பு வேகப்போவதில்லை.

Tags: , ,

Leave a Reply