இனப்பிரச்சினை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தமிழக தலைவர்களை மதித்தும் அரவணைத்தும் செல்வதையே தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எமது நியாயமான அரசியல் தீர்வுக்கு தமிழக தலைவர்கள் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் இனப்பிரச்சினை விவகாரத்தில் இலங்கை மற்றும் தமிழக தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். தற்போது அவ்வாறான நிலைமை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு குடையின் கீழ் ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகின்றது. அதேவேளை தமிழக மக்களின் தியாகங்களையும் மதிக்கின்றது என்றும் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, தமிழக தலைவர்களாகட்டும் இலங்கையில் உள்ள தமிழ்த் தலைவர்களாகட்டும் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் ஒற்றுமையாக செயற்படவில்லை என்பதே எனது அபிப்பிராயமென தெரிவித்திருந்தார்.
அத்துடன், ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் இவ்வளவு உயிரிழப்புக்களையும் நஷ்டங்களையும் தவிர்த்திருக்க முடியும் எனவும் தமிழக முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழக தலைவருமான கலைஞர் கருணாநிதி குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அண்மையில் தமிழகத்திற்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் தம்மை சந்திக்கவில்லை என்று கலைஞர் கருணாநிதி விசனம் தெரிவித்திருந்தமை தொடர்பில் அவரிடம் வினவிய போது, அதற்கு பதிலளித்த இரா. சம்பந்தன் தமிழக முதலமைச்சர்களாக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன், கலைஞர் கருணாநிதி உட்பட அனைவரையும் நாம் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளோம்.
எனினும் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மையாரை சந்திக்க இருந்த காரணத்தினால் முதலில் முதலமைச்சரை சந்தித்து விட்டு பின்னர் ஏனைய தலைவர்களை சந்திக்கலாம் என்று இருந்தோம். எனினும் அவருடனான சந்திப்பு கைகூடவில்லை.
அதேவேளை கால தாமதம் காரணமாக இதர தலைவர்களை சந்திக்க முடியாமல் போனது என்றும் தெரிவித்தார்.
















