ஜனாதிபதியின் வடக்கு விஜயம் யாருக்காக? – இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவான செய்தியை கூறியுள்ளது!

Mahinda5ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வடக்கு விஜயம் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதை முக்கிய

நோக்காக கொண்டிருக்கவி;ல்லை. மாறாக சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வடக்கு மாகாணசபை தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் தப்பான அபிப்பிராயம் ஒன்றை அரசாங்கம் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அந்த சபைக்கு வழங்கினால் அது தனி மாகாணமாக பிரிந்து செல்லக் கூடும் என்ற அச்சத்தை அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பியுள்ளது.

எனவே அதனைத் தடுக்கும் வகையிலும், வடமாகாணசபைக்கு காணி அதிகாரம் இல்லை என்பதை காட்டுவதற்காகவுமே கிளிநொச்சியில் வடமாகாணசபைக்கு தெரியாமலேயே ஜனாதிபதியினால் காணிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் தமிழ்ஈழம் கைவிடப்படுமானால் நிறைவேற்று ஜனாதிபதி முறை கைவிடப்படும் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதி தமிழ் மக்கள்தான் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் ஒழிப்பதற்கு தடையாக இருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்களுக்கு காட்டுவதாக அமைந்திருக்கிறது.

தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதும் அரசாங்கத்தின் மீது சிங்கள மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தும் கருத்தாகவே கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில் இது உள்ளுர் மட்டத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு செல்வாக்கை தேடித்தரும் விஜயமாக அமைந்தாலும், இந்தியாவுக்கு தெளிவான செய்தி ஒன்றை கூறுவதாக அமைந்திருக்கிறது.

13வது அரசியல் அமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர், இலங்கை ஜனாதிபதியிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற அடிப்படையில் கூறிவிட்டார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் பொலிஸ் அதிகாரத்தை வழங்கமாட்டோம் என்று ஆணித்தரமாக கூறிவந்த இலங்கை அரசாங்கம், தற்போது காணி அதிகாரமும் வடமாகாணசபைக்கு இல்லை என்பதை இந்தியாவுக்கு நடைமுறையில் கூறியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்காக தாம் அமைத்து கொடுத்துள்ள ரயில் பாதையில் ரயில் ஓடும் ஆரம்ப நிகழ்வை வடக்கு மாகாண சபையினர் புறக்கணித்துள்ள நிலையில், இந்தியாவினால் எவ்வாறு தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை நிர்வாக பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியும் என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே இங்கு இந்தியா, மிகவும் தாம் செல்வாக்கு செலுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கும் வடக்கு மாகாணசபையின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய சிக்கலுக்குள் முன்னெப்போதும் இல்லாதவகையில் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் மோடி அரசாங்கம், சோனியா அரசாங்கத்தை போன்ற கொள்கையை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப் போகிறதா? அல்லது இந்திரா காந்தி அரசாங்கம் போன்று விழித்துக் கொள்ளப் போகிறதா?

பொறுத்திருந்து பார்ப்போம்

Tags: , ,

Leave a Reply