அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடக சிறையிலிருந்து மாற்ற முடியுமா என்பது தெரியவில்லை. ஆனாலும் சென்னை புழல் மத்திய சிறையில் ஜெயலலிதாவுக்காக சில ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவைப் பார்க்க தினசரி ஏராளமானோர் சிறைக்குப் போகின்றனர். ஆனால் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. ஜெயலலிதாவும் யாரையும் பார்க்க விரும்பவில்லை. இதனால் அனைவரும் சிறை வரை மட்டுமே போக முடிகிறது. இருந்தாலும் சிறைக்கு நாங்களும் வந்தோம் என்ற கணக்கு காட்டுவதற்காக பலரும் சிறைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இவர்களை தினசரி சமாளிக்க வேண்டிய நிலை கர்நாடக போலீஸாருக்கு ஏற்பாடுகிறது. மேலும் தேங்காய் உடைப்பது, சாமி கும்பிடுவது என்று சிறை வாசலையே கோவில் போல மாற்றி விட்டனர் அதிமுகவினர்.
இப்படி அதிமுகவினரால் கர்நாடக மாநிலத்திற்கு கூடுதல் சிரமம் ஏற்படுவதால் பேசாமல் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றி விடலாம் என்று முன்னாள் பிரதமர் தேவெ கெளடா ஆலோசனை கூறியுள்ளார்.
ஆனால் அப்படி ஜெயலலிதாவை தமிழகத்திற்கு மாற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்
மேலும் கர்நாடக சிறை விதிப்படி ஜெயலலிதாவை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்று பெங்களூர் சிறை டிஐஜி ஜெய்சிம்மாவும் கூறியுள்ளார்.
அதேசமயம், சுப்ரீம் கோர்ட் இதைச் செய்ய முடியும். ஜெயலலிதாவே சுப்ரீம் கோர்ட்டை இதற்காக அணுக வேண்டும். அவர் அணுகி கோரிக்கை வைத்து, அதை சுப்ரீம் கோர்ட் பரிசீலித்து சரி மாற்றலாம் என்று கூறினால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இதற்கிடையே, ஜெயலலிதாவை புழல் சிறைக்கு மாற்றினால் அவரை தங்க வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை இப்போதே புழல் நிர்வாகம் எடுத்து வருவதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் புழல் சிறை தரப்பில் உறுதி செய்யவில்லை
















