ஆள் பாதி ஆடை பாதி என்றிருந்த காலம் போய் ஆள் கால், மேக் அப் முக்கால் என்றாகி விட்டது. சுமாராக இருப்பவர்கள் கூட மேக் போட்டு சூப்பராக தேற்றி விடுகின்றனர். வீட்டில் இருக்கும் போது சாதாரணமாக இருப்பவர்கள் வெளியில் ஏதாவது பார்ட்டி அல்லது அலுவலகத்திற்கோ கிளம்பினால் மேக் அப் போட்டுப் பட்டையைக் கிளப்பத் தவறுவதில்லை.
நாம் பயன்படுத்தும் உடையைப் போலவே தேர்ந்தெடுக்கும் மேக் அப் சாதனமும் நம்மை உயர்த்தி காட்டும். இருப்பினும் ஆடை உடுத்துவது எப்படி ஒரு கலையோ அதுபோல மேக் அப் போடுவதும் ஒரு கலைதான். எனவே எப்படி மேக் போடுவது என்பது குறித்து அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை படியுங்கள். அதற்கேற்ப உங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.
இந்திய நிறத்திற்கான அழகு
மேக் அப்பிற்கு முதலில் தேவை பவுண்டேசன் எனப்படும் அடிப்படை முகப்பூச்சு. தரமான பவுண்டேசன் கேக் தேர்வு செய்வது அவசியம். ரசாயணங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தேர்வு செய்வதை விட இயற்கை பொருட்களில் தயார் செய்யப்பட்ட மேக் அப் சாதனங்களை தேர்வு செய்வது முகத்திற்கு பாதுகாப்பானது.
இந்தியர்களின் நிறத்திற்கு ஏற்ப லேசான கலராகவோ அல்லது கோல்டன் கலர் டோன் வரக்கூடிய மேக் அப்களை தேர்வு செய்ய வேண்டும். பிங்க் நிறத்தை தரக்கூடிய மேக் அப் சாதனங்களை தவிர்ப்பது நல்லது.
















