மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி சட்டசபை நடைபெற உள்ளதை தொடர்ந்து அங்கு தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டேல் பாலியல் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.ஆர்.பட்டேல் நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து சுதாகர் கடே தேர்தலில் நிற்கின்றார். நேற்று ஆர்.ஆர்.பட்டேல் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தபோது, அவரை எதிர்த்து போட்டியிடும் சுதாகர் கடேவின் ஆதரவாளர்கள் சிலர் பட்டேலுக்கு ஆதரவு தர முன்வந்தனர். அவர்களிடம் பட்டேல் எதற்காக எனக்கு ஆதரவு தருகிறீர்கள் என்று கேட்டபோது, தங்கள் கட்சி வேட்பாளர் பாலியல் வழக்கில் சிறை சென்றுள்ளதால் அந்த கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்காமல் உங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றோம் என்று கூறினர்.
இதை சுட்டிக்காட்டிய ஆர்.ஆர்.பட்டேல், ‘என்னை எதிர்த்து போட்டியிடும் சுதாகர் கடே, தேர்தலுக்கு பின்னர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் இந்த ஆதரவாளர்களை அவர் இழந்திருக்க மாட்டார்’ என்று பேசினார்.
அவருடைய இந்த பேச்சால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் பாட்டீலின் இந்தப் பேச்சு பெண்கள் சமுதாயத்தினை இழிவு படுத்துவதாக உள்ளது என்று கடும் கண்டனங்களை எழுப்பினர். இதனையடுத்து மன்னிப்பு கோரிய பாட்டீல், “நான் அந்த வேட்பாளரை விமர்சனம் செய்யவே இப்படி கூறினேன், பெண்களை இழிவு படுத்துவதற்காக அல்ல. எனினும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்”என்றார்.
















