வவுனியா தேசிய வைத்தியசாலையில் அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் வடிகள் – லைக்காவின் ஞானம் அறக்கட்டளை
வட பகுதியிலுள்ள சமூகத்தினரின் நன்மைகருதி ஞானம் அறக்கட்டளை நிதியம் மற்றுமொரு பெறுமதிமிக்க வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி வவுனியா தேசிய வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீரைப் பருகும் வகையில் குடிநீர் வடிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மாதத்துக்கு 9000 லீற்றர் நீர் பகிர முடியும்.
இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வவுனியா தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திரு. உதயராஜா, இந்த குடிநீர் வடிகளை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஹிலேன்திரன் அவர்களுக்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் பணியாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த வைத்தியசாலையில் மிக நீண்ட நாட்களாக குறைபாடாக காணப்பட்ட குடிநீர் வடிகளை ஞானம் அறக்கட்டளை நிதியம் வழங்கி வைத்திருப்பதாகவும், இவற்றை ஓ.பி.டி, சத்திரசிகிச்சைப் பிரிவு, மகப்பேற்றுப் பிரிவு மற்றும் 14ஆம் நோயாளர் அறை ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஹிலேன்திரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் அசுத்தமான நீரினால் பரவும் நோய்களே மிக அச்சுறுத்தலாக இனங்காணப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் மூன்றிலிரண்டு பகுதி உலர் வலயமாகும். இப்பகுதிகளில் மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கு பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறான பிரிவினருக்கான உதவிகளை இலங்கையில் ஞானம் அறக்கட்டளை நிதியம் தொடர்ந்தும் வழங்கிவருகின்றது.



















