இடிந்து விழும் நிலையில் உள்ள மண்வீடுகளுக்குள் பழைய கற்பகபுரம் மக்கள் அவதி!

vau-poor1வவுனியா பழைய கற்பகபுரம் மக்கள் மீள்குடியேறிய போதும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி இடிந்து வீழும் நிலையில் உள்ள மண் வீடுகளுக்குள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பழைய கற்பகபுரம் கிராமத்தில் மீள்குடியேறிய நிலையில் 70 குடும்பங்கள் வாழ்கின்றனர். அடர்ந்த காடுகளாக காணப்பட்ட இப் பிரதேசத்தை 1978 ஆம் ஆண்டு வெட்டி துப்பரவு செய்து இங்கு மக்கள் குடியேறினார்கள்.

1990 ஆம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்த அம் மக்கள் இந்தியா சென்று 15 வருடமாக அகதி முகாமில் வாழ்ந்திருந்தார்கள். சமாதானம் வந்ததும் மீண்டும் இலங்கை வந்து தமது சொந்த கிராமமான பழைய கற்பகபுரத்தில் குடியேற முற்பட்டனர். ஆட்லறி தளமாக இயங்கிய பாரிய இராணுவ தளம் இங்கு இருந்தமையால் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை.

2009 ஆம் ஆண்டு இராணுவம் இவ் முகாமை மூடி வெளியேறிய பின்னர் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். இங்கிருந்து இராணுவம் வெளியேறிய போதும் இராணுவ பங்கர்களும் காவலரண்களும் 5 வருடங்கள் கடந்த நிலையிலும் அப்படியே தற்போதும் உள்ளது. அதற்குள் இருந்து முட்கம்பிகளும் உக்கிய வயர்களும் அவ்வப்போது வெளிவருகின்றது. மக்கள் குடியிருப்புக்களுக்குள் காணப்படும் இந்த காவலரண்கள் கூட இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் தோட்டம் கூட செய்யமுடியவில்லை. யுத்த வலயத்திற்குள் வாழ்வதைப் போன்றே அப்பகுதி மக்கள் தற்போதும் வாழ்கின்றனர்.

1978 ஆம் ஆண்டு காடுகளை வெட்டி வீடு கட்டி வாழ்ந்த இம் மக்களுக்கு காணி உறுதிகள் எவையும் இதுவரை வழங்கப்டபடவில்லை. இதனால் பிள்ளைகளுடன் வாழ்பவர்கள் காணிகளை பிரித்து கொடுப்பதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.
vau-poor2
இம் மக்கள் குடியேறிய போது 16 தகரங்களும் 8 சீமெந்து பைக்கற்றுக்களும் மாத்திரமே வழங்கப்பட்டன. அவற்றை வைத்து சிறிய தற்காலிக மண்கொட்டில்களை அமைத்தே வாழ்கிறார்கள். பெய்யும் மழையில் ஊசலாகிறது வீட்டு மண் சுவர்களும் அவர்கள் உயிர்களும். வெடித்து கரைந்து போய் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்தால் அவர்களது உயிர்களுக்கும் ஆபத்து.

இக் கிராமத்தைச் சேர்ந்த சில குடும்பங்களுக்கு தற்போது மலசல கூடம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு வீட்டுத் திட்டம் தரமுடியாது என அரச அதிகாரிகள் கூறுகின்றனர். மலசல கூடத்துக்க போய் நாம சமைச்சு சாப்பிட்டு குடும்பமா நடத்த முடியும். இருக்க வீடு இல்லாமல் அதை வைச்சு என்ன செய்ய முடியும். முதலே இப்படி சொல்லியிருந்த நாம வீட்டையே கேட்டிருப்பம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

எனவே இராணுவ காவலரண்களுடன் யுத்த வலயத்தைப் போன்று நிரந்தரவீடுகள் இன்றி தற்காலிக மண் கொட்டில்களில் வாழும் இம் மக்களின் காணிப்பிரச்சனை, வீட்டுத் திட்டம், தொழில் நடவடிக்கை என்பவற்றுக்கான போராட்டத்திற்கு இவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க போவது யாரு என்ற ஏக்கத்துடன் இப் பகுதி மக்கள் வாழ்கின்றனர்.

Tags: ,

Leave a Reply