யாழ்ப்பாணம் கைதடி கிழக்கு கலைநகர் துர்க்கா சனசமூக நிலையத்தின் 21வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
சனசமூக நிலையத் தலைவர் தங்கராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் துரைராஜா, அதிபரும் தென்மராட்சி பிரதேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளருமான அருந்தவபாலன், கைதடி கிழக்கு விவசாய சம்மேளன தலைவர் செல்லத்துரை, சனசமூக நிலையங்களின் ஒன்றிய தலைவர் கந்தசாமி மற்றும் கலைநகர் முக்கியஸ்தர் தர்சன் உட்பட கைதடி கிழக்கு கலைநகர் மக்கள் திரண்டு கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கைதடி கலைநகர் துர்க்காக சனசமுக நிலையத்தின் 21 ம் ஆண்டு நிகழ்வுகளை சிறப்பித்து மதிப்பளித்து உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
கைதடி கலைநகர் துர்க்கா சனசமூக நிலையம் சிறந்த உறவுப் பாலமாக திகழ்ந்து வருகின்றது. மக்களை திறம்பட வழிநடத்தி வரும் இந்த சனசமூக நிலையத்தின் இந்த மகிழ்வான நிகழ்வில் நானும் கலந்து கொள்வதையிட்டு மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.
அண்மைய நாட்களாக வடக்கு விழாக்கோலம் பூண்டுள்ளதை அறிவீர்கள். சர்வதேச ரீதியாக தமக்கு நேர்ந்துள்ள நெருக்கடிகளை திசை திருப்புவதற்காக ரோம் பற்றி எரிய நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாய் இந்த நாட்டின் அதியுத்தமர் போடுகின்ற நாடகம்தான் இது.
எமது மக்களின் மகிழ்ச்சியையும் உரிமைகளையும் பறித்துவிட்டு இன்று பவுண் குடுக்கிறாராம். நெடுந்தீவு வரை ஓடுகின்றாராம்.
இந்த நாட்டில் ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையை இயங்கவிடாதும் அதற்கான அதிகாரங்களை கொடுக்காதும் தன் பிடிக்குள் அதிகாரங்களை வைத்துக் கொண்டு இப்பொழுது ஈழக் கோரிக்கையை விடும்படி புதிய கதைவிடுவதை நீங்கள் அறிவீர்கள் என தெரிவித்தார்.
















