வாக்காளர் பட்டியிலில் பெயரை இழந்தார் பொன்சேகா..!

sarath-fonsekaஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குமாறு சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளருக்கு பரிந்துரைத்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு வாக்குரிமை இருக்கின்றதா? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளர், சட்டமா அதிபரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தியுள்ளார். 2014ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பிலிருந்து சரத் பொன்சேகாவின் பெயரை நீக்கிவிடுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா, கடந்த மேல் மாகாண சபைத்தேர்தலின் போது கெஸ்பேவ தேர்தல் தொகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார் என்பதுடன் அவருடைய பெயர் 2013ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு, வாக்குரிமை இருகின்றதா என்று சிலர் தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியிருந்தனர். அதுதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.அதனடிப்படையில் சட்டமா அதிபரினால், தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனையை, கட்சி செயலாளர்களை அழைத்து உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையாளர் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சரத் பொன்சேக்காவுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பான வழக்கு மற்றும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் மூன்று வருட சிறைத்தண்டனையும், அதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் அவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்புகளின் காரணமாக சுமார் மூன்று வருடங்கள் சரத் பொன்சேகா சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார். எனினும் அவரது சிறைத்தண்டனை முடிவடைவதற்கு இரண்டு மாதங்கள் இருக்கையில் அரசியலமைப்பின் 34வது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பொதுமன்னிப்பின் கீழ் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யப்பட்டிருந்தார்

Tags: , ,

Leave a Reply