இலங்கைக்கு எதிராக மேலும் தடைகள் விதிக்கப்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் காரணத்தினால் இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.
இந்த தடைகளை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் மேலும் தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீன் வகைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத வகையில் தடை விதிக்கப்படும் என அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக் மூன்று மாத காலப்பகுதியில் தீர்வு வழங்கப்படாவிட்டால், ஏற்றுமதி தடை மட்டுமன்றி வேறும் வகையிலான தடைகளும் விதிக்கப்பட உள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள், படகுகள் மூலம் இலங்கையில் மீன்பிடிக்கத் தடை, இலங்கை ஐரோப்பிய நாடுகள் கூட்டாக இணைந்து மீன்பிடிக்கத் தடை, இரு தரப்பு மீன்பிடித்துறை தொடர்பான உடன்படிக்கை ரத்து போன்ற பல்வேறு வழிகளில் தடை விதிக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை 74 மில்லியன் யூரோ பெறுமதியான மீன் வகைகளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
















