ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போது மூன்றாவது தடவையாகவும் போட்டியிடமுடியுமா என்பது தொடர்பிலான சட்டப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம், உயர் நீதிமன்ற வியாக்கியானத்தை கோரவிருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
18ஆவது திருத்தத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி காரியாலயத்தின் ஊடாக நவம்பர் முதல் வாரத்தில் நீதிமன்றிடம் கோரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வகையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி சமர்ப்பித்ததன் பின்னர், அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தும் என்றும் தெரியவருகின்றது.
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தில் இருக்கின்ற உறுப்புரைகளுக்கு அமைய மகிந்த மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடமுடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா உள்ளிட்ட சட்ட நிபுணர்களும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலரும் தர்க்கித்துவருகின்றனர்.
இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உயர் நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமையவே அரசாங்கம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக தெரியவருகின்றது.
அரசியலமைப்புக்கு வியாக்கியானம் செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே இருக்கின்றது. இந்நிலையிலேய தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு 18ஆவது திருத்தம் தொடர்பிலான வியாக்கியானத்தை அரசாங்கம் கோரவிருக்கின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் உள்ளிட்ட குழாம் ஜனாதிபதி மகிந்த ராஜபன்ஸவின் விசுவாசிகள் என்பதும், சட்டமா அதிபர் திணைக்களமோ? அல்லது நீதித் துறையோ இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுள் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
















