சென்னை: ‘கத்தி’ பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம்.
சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் ‘கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டனர். எனவே இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது.
எனவே, எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் ‘கத்தி’ திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
‘கத்தி’ திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கும், தமிழக காவல்துறைக்கும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் என தீபாவளி வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
‘கத்தி’ படத்திற்கான பிரச்னை தீர்ந்ததால், நாளை தீபாவளியன்று தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாவது உறுதியாகி உள்ளது.
















