விடுதலைப் புலிகள் மீது மீண்டும் தடை விதிக்குமாறு வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில்
மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜயசூரிய கூறியுள்ளார்.
புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தல் என்றும் அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் புலிகள் மீது வித்த தடை நீக்குமாறு உத்தரவிட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உத்தரவை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் முரண்பட்டு வரும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அவ்வாறு தீர்ப்பு வழங்கியமைக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் பிரமுகர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறவு வைத்திருந்தமைதான் காரணம் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடமாகாண சபையின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என சட்டதரணிகள் சங்கத் தலைவர் சமீபத்தில் கூறியிருந்ததை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தடையை நீக்க வேண்டும் என்ற உத்தரவு வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு வலுச் சேர்க்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யவதற்கு தயாராகி வரும் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பதில் மறைமுகமாக செயற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















