தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயன்றார் என்ற, பொய்யான குற்றச்சாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட தேவியன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் என்பவரின் தாயாரான சுந்தரலிங்கம் ரஞ்சித மலர் (வயது 57), பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற விடையம் பற்றி நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள். அவர், கனடாவை நோக்கி செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டு செல்வதற்கு முயன்றபோதே அரச புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம், சாவக்கச்சேரியிலிருந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை காலை 1மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்த அவர், அதிகாலை 4.45க்கு பயணிக்கவிருந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 683 விமானத்தின் மூலம் டோஹா ஊடாக கனடாவுக்கு செல்லவிருந்ததாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. கஜீபனின் தயார் வைத்திருந்த ஆவணங்கள் போலியானவை என்று கூறியே முதலில் அவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால் அவை அனைத்தும் சரியான முறையில் பெறப்பட்டவை என்று பின்னர் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு அவர் எவ்வாறு 6 வருட கனேடிய விசாவைப் பெற்றார் என்று தெரியவில்லை என்றும் , இது தொடர்பாக தாம் கனேடிய தூதுவரிடம் விளக்கம் கேட்க்கவுள்ளதாகவும் புலனாய்வுத்துறையினர் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் உதவ என புலம் பெயர் நாட்டில் ஒரு அமைப்பு கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் பல அன்னிய சக்திகள் இணைந்துள்ளதாகவும் சிங்கள புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளார்கள். இதில் சில நாட்டு அரசாங்கங்களும் இணைந்துள்ளனவா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும் அது முடியும்வரை தாம் கஜீபனின் தாயாரை நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
















