அரசாங்கத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாறியுள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை ஒரு நாளைக்கு நூறுமுறை உச்சரித்து, இந்த அரசின் ஆட்கள் பொய் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்கள்’ ஐரோப்பிய ஒன்றியத்தில் நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் புலிகளின் மீதான தடை நீக்கப்படவில்லை. 28 நாடுகளை கொண்ட இந்த ஒன்றிய உறுப்பு நாடுகளை புலித்தடை தொடர்பான ஆவணங்களை முன்வைக்கும்படி நீதிமன்றம் கோரியுள்ளது. இதை வைத்துதான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள். இந்த தீர்ப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் ரணில் விக்கரமசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். இப்படி பொய்களை உருவாக்கி சொல்லும் குழுவின் தலைவர்தான் விமல் வீரவன்ச என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலில் மக்கள் முன்னால் சென்று, நல்லாட்சியை பற்றியோ, மனித உரிமைகளை பற்றியோ, ஊடக சுதந்திரத்தை பற்றியோ, ஊழல் ஒழிப்பு பற்றியோ பேச முடியாது. இவர்களிடம் எஞ்சி இருப்பதெல்லாம், புனையப்பட்ட புலிக்கதைகள் மாத்திரமே. ஆகவேதான், இன்று இந்த அரசாங்கத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராக, புலிகளின் தலைவர் பிரபாகரன் மாறியுள்ளார். ஆனால், இந்த முறை இந்த புலி பருப்பு வேகாது. நானும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும் கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்து குளித்து ஜலக்கிரீடை செய்தோம் என கடந்த 2010ஆம் ஆண்டு;ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுக்க சென்று பொய் பிரச்சாரம் செய்தவர்தான் விமல் வீரவன்ச.
இது தொடர்பான இறுவட்டு புலிகளின் அலுவலகத்தில் இருந்து இராணுவத்தால் கைப்பற்றபட்டது என்றும் அது தற்போது தன்வசம் இருக்கின்றது என்றும் அவர் அப்போது கூறினார். நாடாளுமன்றத்தில் அவரை கண்டு நான் அந்த இறுவட்டை எனக்கும் காட்டும்படி கேட்டேன்.
நான் எப்படி நீச்சல் அடித்தேன் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று அவரிடம் கூறினேன். ஆனால், கடைசிவரை அப்படி ஒரு இறுவட்டை எனக்கு அவர் காட்டவில்லை. இவர் ஒரு பொய்யர். கீழ்த்தரமான அரசியல் தேவைகளுக்காக, புனையப்பட்ட கதைகளை பகிரங்கமாக வெட்கமில்லாமல் சொல்கின்றவர். இப்போதும் நான் அவருக்கு சவால் விடுக்கிறேன். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து இருந்தால் நான் அதை பகிரங்கமாக சொல்வேன். ஆனால் அப்படி சம்பவம் ஒருபோதும் நிகழவில்லை என்பது எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















