மூழ்கினால் நல்லதுதானே ஆபத்தா என்று நண்பர்கள் எதிர்க் கேள்வி போடவேண்டாம். அப்புறம் அம்மாவும், கிஷோர் சாமியும் ஏகத்துக்குக் குதிப்பார்கள். இன்னொரு சுதாகரனே உருவாகிவிடக்கூடும் !
விஷயத்திற்கு வருவோம். கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல்களில் தோல்வியடைந்து, சட்டப்பேரவையின் முக்கிய எதிர்க்கட்சி என்ற தகுதியையும் இழந்த திராவிட முன்னேற்றக் கழகம், மறுபடிம் மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்விய நிலையில், தான் குப்புற விழுந்த காரணத்தை அலசிக் கொண்டிருக்கிறது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? ஒருவேளை கைப்புண்ணையே பார்க்க முடியாத அளவுக்கு கண்ணில் புரை படர்ந்து விட்டதா என்றால் அதுவும் இல்லை. கண்டும் காணாததுபோல் இருந்து விட்டு, இப்போது புரையோடி, அறுவை சிகிச்சைத் தேவைப்படும் நேரத்தில், புண்ணுக்கு புனுகு பூசப் பார்க்கிறது திமுக மேலிடம். சென்னையில் திங்கட்கிழமை நடந்த உயர் நிலைக் குழு கூட்டத்தில், கட்சியின் தோல்விக்கான காரணங்களை, மாவட்டச் செயலாளர்களும், போட்டியிட்ட வேட்பாளர்களும், தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக இருந்தவர்களும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து தனித்தனியே அறிக்கை தயாரித்து தலைவர் கலைஞரிடம் தருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை தன்னுடைய 91-ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், உரிய நடவடிக்கைகளுக்குப் பிறகு, கட்சி வைரம் போல் ஒளிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால் இன்று திமுக என்ற அரசியல் இயக்கத்தை பீடித்திருக்கும் நோய் அதன் மாவட்டச் செயலாளர்களே என்று எல்லோருமே ஒப்புக் கொள்கிறார்கள். குறுநில மன்னர்கள் போல் வலம் வரும் இவர்கள் எல்லோருமே கட்சியின் தலைமைப் பொறுப்பேற்கத் துடியாய் துடிக்கும் மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்கள். அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதனால்தான் மாவட்டங்களைப் பிரித்து, இந்த மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தைக் குறைக்கும் ஒரு திட்டத்தையும் திமுக தலைமை முன் வைத்திருக்கிறது. தோல்வியைக் காரணம் காட்டி யாரையாவது வெளியேற்றினால், அவர்கள் உடனே போய் மு.க. அழகிரியின் அணியில் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சமும் கட்சித் தலைமைக்கு இருக்கிறது. தறுதலையாய் பிள்ளைகளை வளர்த்து விட்டு பின்பு தவியாய்த் தவிக்கும் பெற்றோரின் நிலைதான் திமுகவுக்கு உருவாகியிருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரை கட்சியில் தன் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான போராட்டம் தொடங்கிய காலத்திலேயே, தனக்கு வேண்டிய, ஆனால் சமூகத்தில் எவ்வித நற்பெயரும் இல்லாத நபர்களை கட்சியில் ஊக்குவித்தார்.
சமுதாயத்தில் எவையெல்லாம் எதிர்மறையான, ஏற்றுக் கொள்ளத்தகாத குணங்களாக இருக்கின்றவோ, அவற்றையெல்லாம் கல்யாண குணங்களாக மாற்றும் வல்லமை படைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. மதுரையை நடுங்க வைத்தால் அவன் மாவீரன். காவல் நிலையத்தில் புகுந்து ஆதரவாளர்களை வெளியே கொண்டு வந்தால் அஞ்சாநெஞ்சன். ஊரில் அடாவடியாக அரசியல் நடத்துபவன் “முரட்டு பக்தன்” சிங்காரச் சென்னையை சீர்குலைக்கப் பார்ப்பவன் சிட்டாய்ப் பறந்து வேலை செய்யும் என் தம்பி கிட்டு. அவருக்கு சற்றும் குறைவில்லாமல் ஸ்டாலினும் அழகிரியும் நடந்து கொள்கிறார்கள். ஊரில் ஒரு கதை சொல்வார்கள். மாற்றான் தோட்டத்தில் இருந்து கத்திரிக்காயைத் திருடி வந்து தன்னுடைய அன்னையிடம் சமைக்கக் கொடுத்தான் ஒரு சிறுவன். சமைக்கும் போது அதில் விளக்கெண்ணெயை அதிகமாக ஊற்றி சமைத்துக் கொடுத்தாள் தாய். கசக்கிறதே என்று கேட்ட மகனிடம் திருடி சாப்பிட்டால் எல்லாமே கசக்கும் என்று சொன்னாள். ஆனால் திமுக தலைமை, தவறு செய்த தன்னுடைய பிள்ளைகளைப் பக்குவமாய்த் திருத்தாமல், கத்தரிக்காயை நன்றாக நல்லெண்ணெய் விட்டு வதக்கி, கொத்சு செய்து கொடுத்து பிள்ளையின் உடலைத் தேற்றும் தாய் போல் நடந்து கொள்கிறது. 2006-ஆம் ஆண்டில் இருந்து 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சிக்காலத்தில்தான் அக்கட்சியைக் குறித்த மக்களின் மதிப்பீடு அதலபாதாளத்தில் வீழ்ந்தது. நிலத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்த காலத்தில், அக்கட்சியைச் சேர்ந்த பலரும் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். பெரும்பாலும் எல்லா மாவட்டத்திலும் நில அபகரிப்பு வழக்கில் சிக்காத திமுககாரர்களே இல்லை என்ற அளவுக்கு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கட்சித் தலைமை அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை. திருச்சியில் திமுக அலுவலகம் கட்டப்பட்டிருக்கும் இடமே அபகரிப்பு நிலம்தான் என்ற அளவுக்கு நிலைமை தறிகெட்டுப் போனது. சாலையோரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, அதை விற்று பிள்ளைகளைக் கரையேற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த குடும்பங்கள், ரியல் எஸ்டேட் திமிங்கிலங்களின் வாயில் மாட்டிக் கொண்டார்கள். பலர் வலுக்கட்டாயமாக நிலங்களை விற்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டனர். திமுகவின் திருச்சி மாநாட்டில் பேசிய கருணாநிதியே, நேருவின் தம்பி இராமஜெயம் உயிரோடு இல்லாவிட்டாலும், அவர் தன்னுடைய நிலத்தை இந்த மாநாடு நடத்துவதற்கு வழங்கி பங்களிப்பு செய்திருக்கிறார் என்றார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கிறது அந்த நிலம். ramajஇத்தனை ஏக்கர் நிலம் எப்படி வாங்கப்பட்டது என்பது குறித்து தலைமைக்கு அக்கறையில்லை. மாநாடு நடத்துவதற்கு நிலம் கிடைத்தால் போதும் என்பதோடு அதன் கவலை முடிந்து விட்டது. குறிப்பிட்ட சில மாவட்டச் செயலாளர்களைத் தவிர எல்லோருமே இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் வரம்பு மீறி, சட்டத்தை மீறி அல்லது வளைத்து, காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு குதியாட்டம் போட்டார்கள். தனக்கு விசுவாசமாக இருந்ததால் தலைமையும் அவர்களின் அடாவடிகளைக் கண்டுகொள்வதில்லை. இது ஒரு புறமிருக்க, திமுகவில் ஒரு புது கலாச்சாரம் தொடங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிட முன் வருபவர்களின் செல்வாக்கு என்ன என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தேர்தலில் யார் அதிகம் செலவு செய்வார்கள் என்பதே ஒரு தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. பொறியியல் கல்லூரி நடத்துபவர்கள், சாராய ஆலை அதிபர்கள், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், பெரும் வியாபாரிகள் என கோடியில் புரள்பவர்கள் மட்டுமே களமிறக்கப்பட்டார்கள், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர.
இந்த சீரழிவு 2006லேயே தொடங்கி இப்போது மிகக் கோரமாகியிருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, இந்தத் தொகுதியில் இன்னார்தான் நிறுத்தப்படுவார். இன்னார்தான் மந்திரியாவார் என்று முன்னரே யூகித்துவிடும் அளவுக்கு நிலைமை உருவாகியது. பொந்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு கொழுத்துப் போன பெருச்சாளிகளாக இவர்கள் மாறிப் போனார்கள். புதிதாக வருபவர்களுக்கு எந்த வாய்ப்பும் இருக்காது என்ற நிலைமையில், இளைஞர்கள் பெரும்பாலும் திமுகவில் இருந்து விலகியே நின்றார்கள். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் புதிய வாக்காளர்களின் வாக்குகளை திமுக பெற முடியவில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆளும் அஇஅதிமுக ஒன்றும் யோக்கியர்களின் கூடாரம் இல்லைதான் என்றாலும், அக்கட்சியைப் பொறுத்தவரை இரண்டாம் கட்டத் தலைவர்கள் கீழ் நிலையில் நடைபெறும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. (தலைமை தவறு செய்தால் கேட்க முடியாது என்பது வேறு!).
அஇஅதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வரும் நாட்களில் எல்லாம் தவம் கிடந்து, அவர் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் கிடந்த தொண்டர்கள் பலர் இன்று சட்டப் பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களாக நுழைந்திருக்கிறார்கள். எங்கோ ஒரு மூலையில் தொடர்ந்து கட்சி வேலை செய்யும் தொண்டனுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அத்தகைய ஒரு நிலைமை திமுகவில் இன்று இல்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம். தேர்தல் தோல்வி வரும் நேரத்தில் ஈவு இரக்கம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் திமுகவிலோ இரண்டாம் கட்டத் தலைவர்கள் எல்லோருமே தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட பிள்ளைகளாக நிற்கிறார்கள். சிறு கோல் கொண்டு ஓங்குவதற்குக் கூட தலைமையால் இயலாது.17raja2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு திமுக குறித்தை மதிப்பீட்டை முற்றிலுமாக சிதைத்து விட்டது. அதில் சிக்கிய ஆ. ராசாவுக்கு மீண்டும் சீட் கொடுத்தது. காலையில் இருந்து இரவு தூங்கும் வரை காங்கிரசை வசவு பாடி விட்டு, தூக்கத்தில் திடீரென எழுந்து பிதற்றுவது போல், மதச்சார்பின்மையைப் பாதுகாக்க காங்கிரசைத் தேர்தலுக்குப் பிறகு ஆதரிப்போம் என்றார் கருணாநிதி. நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருப்பதைக் கணிக்க அவரால் முடியவில்லை.
பொதுவாகவே யதார்த்தங்கள் எதனையும் கலைஞர் உணர்ந்ததாகவோ அல்லது கீழ்மட்டத் தலைவர்கள் அவருக்கு உணர்த்த முயல்வதாகவோ தெரியவில்லை.
நவீன தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் விளைவாக பொருளாதாரக் கட்டமைப்பு வழுக்கு மரமாகியிருக்கிறது. அதில் ஏறும் மனிதனின் மனநிலையை திமுகவால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதையும் இழப்பதற்கு தயாராக இல்லாத ஒரு சமூகம், எதை செய்தாவது முன்னேற வேண்டும் எனத்துடிக்கும் சமூகம், அதன் காரணமாக கடவுள் நம்பிக்கையை நாடி நரம்புகளில் புகுத்திக் கொண்டு, திருப்பதி்க்கும் பழனிக்கும் பாதயாத்திரைப் போகும் சமூகத்தின் எண்ணவோட்டம் திமுக தலைமைக்குப் புரியவில்லை.
ஆனால் கலைஞர் தனது அறிக்கைகளில் பகுத்தறிவாளனாகக் காட்டிக்கொள்ளும் அதே நேரத்தில், திமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வீதியில் இறங்கி தொண்டன் பிரச்சாரம் செய்யும் அதே காலத்தில், ஸ்டாலின் மனைவி கோயில் கோயிலாக வலம் வருகிறார். கருணாநிதியின் துணைவியார் சாமியார் சாமியாராகப் பார்த்து பிரசாதம் பெறுகிறார். கனிமொழியைக் காப்பாற்ற யாகங்கள் நடத்தப்படுகின்றன.
90களின் இறுதியில் நெற்றியில் குங்குமத்தோடும் திருநீற்றோடும் கடலூரில் தொண்டர் ஒருவர் வரவேற்றபோது, கலைஞர். ”என்னை வரவேற்க ஒரு இளைஞன் வாசலுக்கு ஓடி வந்தார். அவர் பெயர் ஆதி சங்கர். அவரது நெற்றில் வடிவது குங்குமமா… ரத்தமா என தெரியவில்லை. பகுத்தறிவு கட்சியில் இருந்துகொண்டு இப்படி குங்குமம் வைக்கலாமா?” என்று திருமண விழா ஒன்றில் கொதித்தார். குங்குமப் பொட்டுவைத்து கருணாநிதியின் கோபத்துக்கு ஆளான அதே ஆதி சங்கருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கடலூர் தொகுதியில் எம்.பி. சீட் கொடுத்து நாடாளுமன்றத்துக்கும் அனுப்பினார் கருணாநிதி. தலைமை தனது பகுத்தறிவு நிலைகளில் நேர்மை கடைபிடிக்கவில்லை என்பது தொண்டனுக்கும் தெரியும். மக்களுக்கும்தான். இந்நிலையில் அதன் அகங்காரம் கலந்த பாசாங்கு கட்சியை மக்களிடமிருந்து அந்நியப் படுத்தியது எனலாம்.
இன்றைய பொருளாதார நிகழ்வுகளின் மேலுமொரு பரிமாணம் மேல் மற்றும் இடைநிலை சாதியினர் தலித் மக்களுக்கெதிராகவும், சிறுபான்மையினருக்கெதிராகவும் அணி திரள்வதுதான். அத்தகைய திரட்டலை தீர்க்கமாக எதிர்க்காமல், கொடுமைகள் நடக்கும்போது பொத்தாம் பொதுவாக, மென்று விழுங்கி அறிக்கைகள் விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமிய தலித் அமைப்புக்களுடன் கூட்டணி அமைப்பதால் என்ன பயன்?
தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களிடம் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் அத்தகைய கூட்டணியும் படுதோல்விக்குக் காரணம் எனப் புலம்பியிருக்கின்றனர். இந்நிலையில் அரசியல் என்பதே தங்களை வளப்படுத்திக்கொள்ள என்ற ரீதியில் செயல்படும் கலைஞர் வகையறா இனிவரும் தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகளையும் மனிதநேய மக்கள் கட்சியையும் சற்று தள்ளிவைக்கவும் முற்படலாம். 2002 கலவரங்கள்போது கூட கருணாநிதி வாய் திறக்கவில்லையே.
காங்கிரஸ் உருக்குலைந்து, மதச்சார்பின்மை ஒரு கெட்டவார்த்தையாக மாறிவிடக்கூடிய சூழலில் இந்து மத தீவிரவாதம் ஆல்போல் தழைக்கக்கூடும், அதன் விளைவாய் சிறுபான்மையினர் மீதான திமுகவின் ’காதலும்’ கூட பட்டுப்போகலாம்.
எதைப் பற்றியுமே கவலைப்படாமல், காலாவதியாகிப் போன சொல்லாடல்களால் இன்னும் மக்களைக் கவர நினைக்கிறது தலைமை. கலைஞர் வசனம் எழுதி அண்மையில் எந்தத் திரைப்படமும் வெற்றி பெற்றதாக தெரியவில்லை. மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட தாய், உலகப் புகழ் பெற்ற மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலின் அடிப்படையில் உருவான திரைப்படம், ஒரு வாரம் கூட திரையரங்குகளில் ஓடவில்லை. இதில் நடித்த வித்தகக் கவிஞர் விஜய் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை கருணாநிதியின் அரசியல் சொற்போர்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்.
1940-களில் பயன்படுத்திய பொருளற்ற, மேனாமினுக்கி வார்த்தைகளையேப் பேசி, அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கியிருக்கிறேன் என்று அழுது, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று ஒப்பாரி வைத்து, வாதங்கள் தோற்கும் போது வசவுகளை முன்னிறுத்தி, பார்ப்பனர்களை வசைபாடி, கடவுளர்களை கண்டித்து இன்னமும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர்.
ஊமைப் பட உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்த சார்லி சாப்ளின், திரைப்படம் பேச ஆரம்பித்ததும் திணறிப் போனார். சுதாரித்துக் கொண்டு, தன் பாணியை மாற்றி திரைப்படங்கள் தயாரிக்க முன்வந்தார். ஆனாலும் அவ்வாறு அவர் இயக்கிய பேசும் படங்களில் இரண்டே இரண்டுதான் வெற்றி பெற்றன. திமுகவுக்கோ இந்த சுதாரிப்பு தோன்றவேயில்லை.
(ஜெயலலிதாவைப் பொறுத்த வரை 1991-96 அட்டகாசங்கள், 2001-06 மமதை இவை கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. பேரழிவின் எல்லைக்குச் சென்றாலும் சற்று நின்று யோசிக்கிறார், கலைஞரும் அவருக்குக் கைகொடுக்கிறார்!)
கடைசியாக மு.க. அழகிரி. அவர் திமுகவின் வெற்றியைப் பாதிக்கவில்லை என்று எல்லோரும் வாதிடுகிறார்கள். உணவு விடுதி அதிபரின் மகன், அதன் வெளியே நின்று கொண்டு எங்கள் கடை சாம்பார் ஊசிப் போய் விட்டது என்று கூவிக் கொண்டிருந்தால், அங்கேப் போய் சாப்பிட பைத்தியக்காரன் மட்டுமே முன் வருவான். கடை வாசலில் இருந்து பையனை அப்புறப்படுத்தியது திமுக. அவன் ஊர் ஊராய் போய் ஊசிப் போன சாம்பார் புராணம் பாடினான். ஹோட்டல் வாசலில் கேட்ட குரல் தமிழகம் முழுவதும் கேட்டது. வியாபாரம் படுத்து விட்டது.
அஇஅதிமுக மீதான அதிருப்தியை பயன்படுத்தியே ஆட்சிக்கு வரமுடிவதால் மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் திமுகவிற்கு எழவில்லை. ஆனால் வரலாறு காணாத தோல்வி, ஓர் இடத்தில் கூட வெற்றி பெறமுடியாத அவலம், இப்புதிய நெருக்கடிகளை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் விழிக்கிறது கட்சி. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்று கோரிக்கை வைத்து தப்பிக்கப்பார்க்கிறது.kattu
அது நடவாது. தலைவரே காரியம் கைமீறிப்போய்விட்டது. கட்சியின் போக்கில் பாரதூர மாற்றங்கள் ஏற்படாவிடில் கட்டுமரம் மூழ்குவது உறுதி. எங்கள் பங்கு ஊதிவிட்டோம். மற்றபடி உங்கள் விருப்பம்.
நன்றி,
-சவுக்கு-
















