இலங்கையில் தமிழ் மக்கள் ஈழம் என்ற தனி நாட்டை நோக்கி தள்ளப்படாமல் இருக்க அவர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்கள் தனியான தமிழ் நாட்டுக்காக அழுத்தங்களை கொடுக்கவில்லை எனவும் அவர்கள் தமிழர்களுக்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வுக்கே அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் மாத்திரம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு சட்ட மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் பல பிரதேசங்களில் இராணுவம் தொடர்ந்தும் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது.
இன மோதல்கள் நாட்டின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் போர் முடிந்து 5 வருடங்களின் பின்னர் கூட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முடியாமல் போயுள்ளது எனவும் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வரும்பொது ஓட்டப் போட்டிக்கு பயிற்சி வழங்குவதுபோன்று பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. எவ்வாறு ஜனாதிபதியைப் பார்த்து சிரிப்பது. கோடிகள் அசைப்பது போன்ற பயிற்சிகள் நடந்து முடிந்துள்ளது.
யாழ்.இந்துக்கல்லூரியில் பொலிஸார் நேரடியாகச் பயிற்சி வழங்கியுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் புரிந்து கொள்ள முடியாத அகல பாதாள வேறுபாடு உள்ளது.
ஜனாதிபதி கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைக்கோல் பட்டடை நாய்போன்று உள்ளதாக தெரிவித்திருந்தார்.
வைக்கோல் பட்டடைகளை இரும்புப் பட்டறைகளாக மாற்றவேண்டாம் என இங்கு தெரிவித்துக்கொள்கிறோம் என சிறீதரன் எம்பி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறீதரன் எம்.பி சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அஷ்வர் எம்.பி கூச்சல் போட்டதுடன், இடைநடுவில் எழும்பி மாற்றுக் கருத்துக்களை கூறினார்.
இதன்போது, பாராளுமன்றில் புத்தளத்துக் கழுதைகள் போன்று ஊளையிடுவதை நிறுத்துமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
















