பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு காலப்பகுதியில் தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இரு துருவங்களாக இருந்த ஆயுத போராட்டத்தையும், அரசியலையும் ஒரே புள்ளியில் இணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் கனிதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. வேற்றுமைகளுக்குள் தமிழன் கண்ட ஒற்றுமையின் சின்னமாக அது வெளி தோன்றியது.
ஆயுத ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் மிகவும் பலம் அடைத்திருந்த அந்த தருணத்தில், தராகி சிவராம் உட்பட சில முக்கியஸ்தர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கான காரண கர்த்தாக்களாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் மனம் வைத்த ஒரே காரணத்தால் தான் அது தோற்றம் பெற்றது.
தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியான விடுதலைப்புலிகள் தமிழீழம் என்னும் உயர்ந்த இலட்சியத்துக்காக அதனை அடைவதற்காக அவர்கள் வகுத்துக்கொண்ட இராச தந்திரத்தின் ஒரு அலகாக அதனை உருவாக்கினார்கள். இலட்சிய நெருப்பில் ஆகுதியாகிப்போன மாவீரர்கள் மீது சத்தியம் மேற்கொண்டு அவர்களின் கனவை நனவாக்குவதே நமது கடமை என்று புறப்பட்ட அமைப்பு தான் இது.
அன்றைய சூழலில் விடுதலைப்புலிகளுக்கு தமிழ் மக்கள் எவ்வாறான ஒரு ஆதரவு தன்மையை காட்டி வருகிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கு சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டு இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முதலாவது தேர்தலை சந்திக்கிறது.
விடுதலைப்புலிகளின் அரசியல் துறை நேரடியாக தமிழ் தேசிய கூட்டமைபுக்காக தேர்தலில் களத்தில் இறங்கி வேலை செய்தது. அதன் பிரகாரம் 22 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெறுகிறது. மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் மனங்களிலும் இடம்பிடித்துவிடுகிறது.
அந்த அரசியல் கூட்டமைப்பு உருவாகி எட்டு வருடங்களுக்குள் உண்மையாக உழைத்த நான்கு உறுப்பினர்கள், சிறந்த ஆளுமைகள் சிறீலங்கா அரசால் சுட்டு கொல்லப்பட்டனர்.
2009 மே எல்லாமே மாறி போனது. ஆனாலும் தமிழ் மக்களுக்கு இருந்த ஒரே ஒரு அரசியல் நம்பிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்தது. அதனை அவர்கள் விடுதலைப்புலிகளால் விட்டு செல்லப்பட்ட வரமாகவே பார்த்தார்கள். தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை அது ஏற்றுகொண்டது. களத்தில் இருக்கும் ஒரே ஒரு ஏகோபித்த பிரதிநிதித்துவமாக நிலை நிறுத்திகொண்டது.
ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அரசியலில் சாபமாக மாறிவருவதை அதன் அண்மைக்கால செயற்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.
மக்களின் ஆணையை பெற்ற கட்சி என்னும் வகையில் அந்த மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக ஒரு தெளிவான செயத்திட்டத்தின் அடிப்படையில் செல்லவேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைய மிகப்பெரிய பொறுப்பாகும்.
இழப்புகளின் மேல் இழப்பாக இலட்சக்கணக்கில் மக்களினை தமிழர் தரப்பு இழந்திருக்கிறது. ஆனால் 2009 க்கு பின் இதுவரையிலும் தீர்வுத்திட்டம் தொடர்பாக தெளிவான ஒரு வரைபை இது முன்வைக்க தவறி வருகிறது.
மாவீரரின் கனவை சுமந்து செல்கிறோம் என்று கூறும் அவர்களே தனி தமிழீழத்தை நாங்கள் எப்போது கேட்டோம் என்றும் சொல்லி கொள்கிறார்கள். அவ்வப்போது இது தொடர்பாக கேள்வி எழும்போது ”நாங்கள் இந்தியா போன்ற ஆட்சி முறையை எதிர்பார்க்கிறோம் ” என்று சொல்லி நழுவி விடுவது வாடிக்கையாகி விட்டது .
உண்மையில் இந்தியா ஒரு தூய்மையான சமஷ்டி ஆட்சி முறைக்கு உரிய நாடு கிடையாது. அரைகுறை சமஷ்டி ஆட்சி உடைய நாடு எது என்றால் அது இந்தியாவாக தான் இருக்க முடியும். உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறை செலுத்த வேண்டிய மிக முக்கியமான விடயம் இது ஆனால் அதன் போக்கை பார்க்கிற போது அதனிடம் எந்த விதமான திட்ட வரைபுகளும் இருப்பதாக தெரியவில்லை.
வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டபைப்பு இன்று அதன் ஒற்றுமை என்னும் உறுதி தன்மையை பேணுகிறதா? என்பது வேதனைக்குரிய விடயம். தமிழ்த் தேசியக் கூட்டப்பின் உருவாக்கத்தின் போது அந்த சூழலில் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் நடந்தன.
அதில் ஒன்றுதான் அதன் தலைமைத்துவம் தொடர்பானது. மகிந்தவுக்கு முன்னமே நான் புலிகளின் கொலை பட்டியலில் இருந்தவன் என்று சுய அறிக்கை விடும் சம்பந்தன் எப்படி கூட்டமைப்பின் தலைவராக்கப்பட்டார். உண்மையில் சம்பந்தன் கொலைப்பட்டியலில் இருந்தாரா இல்லையா என்பதற்கு அப்பால், அவர் தமிழீழ விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை ஆத்மார்த்தமாக நேசித்த ஒருவர் அல்ல.
ஆனாலும் வெளியிலே கள்வனை விட்டு வைப்பதிலும் பார்க்க அவனை காவலுக்கு விடுதல் நல்லது என்ற சித்தாந்தத்தில் இன்ன பிற உப காரணிகளோடு அவர் தலைவராக்கப்பட்டார். அன்று அவர் தலைவராக்கப்படவேண்டும் என்பது ஒரு நிர்பந்த அரசியல் கள நிலையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாக கருதக்கூடிய ஒன்றே. விடுதலைப்புலிகள் ஒரு பெரும் போர் நிகழப்போவதை நன்கு உணர்ந்து இருந்தார்கள் ஆனால் ஒரு முள்ளிவாய்க்காலை யாரும் எதிர்பார்க்கவில்லை.
விடுதலைப்புலிகளின் ஸ்திரத்தன்மை தாயக பரப்பில் இருக்கும்வரை சம்பந்தன் தாயக கோட்பாடுகளுக்கு விரோதமான செயற்பாடுகளை செய்யமாட்டார் என நம்பப்பட்டது அதனால் அவர் தலைமையாகப்படார். ஆனால் முள்ளிவாய்க்காளுக்கு பின், உரிமையாளர் காணமல் போன பின், காவலுக்கு விட்ட கள்வன் தன குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டான்.
முதலில் புலிகளால் நேரடியாக முன்னிருத்தப்பட்டோர் விரட்டப்பட்டனர். அன்று தொடங்கிய திருவிளையாடல் இன்று கூட்டமைப்பை கட்சியாக பதிவது வரை தொடர்ந்து கொண்டே செல்கிறது . கூட்டமைப்பை ஒரு கருத்தொருமைப்பாட்டுடன் அதனை பதிவு செய்ய திராணி அற்ற தலைமைத்துவத்தால் எப்படி ஒரு ஆரோக்கியமான தீர்வை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிர்பார்க்க முடியும்?
ஒட்டுமொத்த யுத்தத்திலும் ஏறத்தாள மூன்று இலட்சம் மக்களை தமிழர்கள் இழந்திருக்கிறார்கள் இறுதி யுத்தத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் இல்லை . மனித உயிர்கள் மீதான அழிப்பை இன அழிப்பு என்ற சொற்பதம் கொண்டு அழைக்கப்படுவதற்கு எத்தனை உயிர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
மாறாக குறித்த இனத்தை, சமயத்தை, குழுமத்தை சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில் கொல்லப்படுகிறார்களா என்பதே முக்கியம் கொள்ளப்படுகிறது. தமிழர் தரப்பின் மீதாக நடாத்தப்பட்டது, நடந்துகொண்டிருப்பது இனப்படுகொலையே இதனை இனப்படுகொலை என்று நிறுவுவதற்கு தமிழர் தரப்பிடம் போதுமான சக்தி இருக்கிறது. ஆக இனப்படுகொலைக்கான நீதியை கோருவதற்கு அவர்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது.
இதில் நீதிமான் விக்கினேஸ்வரன் கூறுவது போல் சட்ட ரீதியிலான எந்த விதமான சிக்கலும் இல்லை. அரசியல் புற நிலைமைகள் தாக்கம் செலுத்தக்கூடிய ஒன்றுதான். அந்த புற நிலை அரசியலை கையாளக்கூடிய அரசியல் முதிர்ச்சி மிக அவசியமான ஒன்று. இதுவரையிலும் கூட்டமைப்பு தமிழருக்கு நிகழ்ந்தது ஒரு இன அழிப்பு என்று எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. இது ஈழ தமிழ் இனத்தின் இருப்புக்கு ஆபத்தான ஒன்று.
வார்த்தையில் கூட இன அழிப்பை உச்சரிக்க விரும்பாதவர்கள் எப்படி செயலில் தமிழர்களை காப்பாற்ற போகிறார்கள்? ஐ.நா விசாரணையை கூட ஒரு தயக்கத்துடனேயே கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது போல் தோன்றுகிறது. ஏனெனில் இந்த விசாரணை நடை பெறுவதற்கு முன் நின்று செய்ய வேண்டியவர்கள் அந்த செயலை சரிவர செய்ததாக தெரியவில்லை.
அனந்தி அண்மையில் விசாரணை காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தலைவர், முதலமைச்சர், பேச்சாளர் என்று பலர் இருக்க அனந்தி அந்த அறிக்கையை வெளியிடும் அளவில் விசாரணை மீதான கரிசனை இருக்கிறது. அனந்தியும் கூட்டமைப்பு தானே என்று கேள்வி எழுப்பினால் அது வறுமையான அரசியல் அறிவின் கேள்வியாகவே இருக்க முடியும்.
அண்மையில் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் மிகவும் முக்கியமானவை. பொய்யான ஆசனத்தில் அமர்ந்திருந்தாலும் முதலமைச்சர் என்னும் பெயருக்கு ஏற்றாற்போல் நடக்கவேண்டியது அவசியமான ஒன்று. தொடர்பாடல் என்பது சிறந்த அரசியலுக்கான அடிப்படைகளில் ஒன்று. உறுப்பினரின் கருத்தானது முடிவெடுத்தல் என்னும் கருமத்தில் கூட்டமைப்பில் கருத்து சுதந்திரம், மாற்று கருத்துகளை உள்வாங்குதல் தொடர்பாக எந்நிலையில் நிக்கிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இது கூட்டமைப்பின் பிரச்சனையாக பார்க்க முடியாது கூட்டமைப்பை நம்பி வாக்களித்த மக்களின் பிரச்சனையாவும் தான் பார்க்க்க வேண்டும். இதுவரையிலும் உருப்படியான எந்த செயலையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக செய்யவில்லை என்பதே பலராலும் முன்வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.
அகிம்சை வழியில் போராட போகிறோம் என்று சொல்கிறார்களே தவிர இதுவரையில் தேங்கி கிடக்கும் தமிழ் மக்களின் ஏராளமான பிரச்சனைகளில் ஒன்றையேனும் கையில் எடுத்து திடமான எந்த ஒரு போராட்டத்தையும் நடத்த இல்லை. உரிமைகளுக்காக போராடும் ஒரு இனமாக மக்களை அணிதிரட்டி ஜனநாயக அரசியலில் உயிர்ப்பு நிலையில் வைத்திருக்க வேண்டியது வினைத்திறனான கட்சிக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்பாக அமைகிறது. அந்த அணிதிரட்டல் செயற்பாடு இது வரையில் தொடங்கப்படவில்லை.
சில காலங்களுக்கு முன்பு சந்தியடியில் நடந்த சம்பாசனையில் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் பின்வரும் தொனிப்பட கூறினாராம் ”நீங்கள் என்ன தான் சனத்துக்காக போராடினாலும், தேர்தல் மேடையில நாங்கள் சொல்லுவம் நாங்கள் புலிகளால் உருவாக்கப்பட்டவர்கள் என்று சனத்துக்கு அது போதும் முழு ஓட்டும் எங்களுக்குத்தான் என்று.
தேர்தல் காலத்தில் பிரபாகரன் அவர்கள் மாவீரனாகவும், மாவீரர்கள் தெய்வங்களாகவும் தோன்றுவதும் தேர்தல் முடிந்த பின் வன்முறையாளர்களாக மாறுவதும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் தமிழ் மக்களின் சமகால ஒற்றுமை என்பது மாவீரர்களின் மேல் கட்டியமைக்கப்பட்டது. அவர்களின் கனவுகள் சிதைக்கப்படுபோது அதற்கான பலனை கூட்டமைப்பு எதிர்கொள்ளவேண்டிய சூழல் ஒரு நாள் உருவாகும்.
இதிகாசங்களில் சில சம்பவங்கள் நடந்துள்ளன அதாவது இறைவனால் அளிக்கப்பட வரமே வரம் பெற்றவரின் அழிவுக்கு அடிப்படையான சாபமாக மாறி இருந்திருக்கின்றன. வரமாக பார்க்கப்பட்ட கூட்டமைப்பு தமிழரின் சாபமாகி வருவதால் அது தொடர்பான அடுத்த கட்ட முடிவை மக்கள் தான் எடுக்க வேண்டும்.
நன்றி,
-பதிவு, இளையவன்னியன்.
















