அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் தமக்கு தெரிவிக்கப்படுவதில்லை என வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வடமாகாண சபையின் 17 ஆவது அமர்வு இன்று (28) காலை 9.30 மணியளவில் கைதடியில் உள்ள மாகாண பேரவை கட்டடத்தில் நடைபெற்றது.
இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சபையில் தெரிவிக்கையில்,
பலத்த மனகஷ்டங்களோடு தான் நாங்கள் மாகாண சபைக்கு வந்து போகின்றோம். ஐந்து அமைச்சர்கள் மட்டும் மாகாண சபை அல்ல நாங்களும் மாகாண சபை உறுப்பினர்கள் தான் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இன்றைய அமர்வின் போது மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் மாகாண சபை அமைச்சர்கள் தமக்கு எதுவும் தெரிவிப்பதில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.
அதன் போதே அனந்தி சசிதரனும் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேபோன்று பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் கருத்து தெரிவிக்கும் போது,
´அமைச்சரவை தீர்மானங்களை எதற்காக உறுப்பினர்களுக்கு சொல்ல தயங்குகின்றீர்கள். எதற்காக எங்களை புறக்கணிக்கின்றீர்கள். தொடர்ந்து எங்களை புறக்கணித்தால் நாம் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்´ என்றார்.
அனந்தி மற்றும் அன்ரனி ஜெகநாதன் கருத்துக்களால் கடுப்பாகிய அமைச்சர் டெனீஸ்வரன் அனந்தி, அன்ரனி ஜெகநாதனை முறைத்து பார்த்தபடி,
´அமைச்சு வாரியத்தில் நாம் படும் கஷ்டங்கள் ஏராளம். அது உங்கள் இருவருக்கும் தெரியுமா? அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதில் எமக்கு எந்த தயக்கமும் இல்லை நாம் எந்த சுத்துமாத்தும் செய்யவில்லை.
சபை அமர்வுக்கு முன்னர் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை கேட்கலாம். அக்கூட்டம் நடைபெறும் வேளைகளில் வீடுகளில் படுத்து இருந்திவிட்டு அமர்வில் வந்து கேள்வி கேட்காதீர்கள்´ என்றார்.
அதனை அடுத்து அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ´இவற்றை நாம் கூட்டங்களில் பேசி தீர்த்து கொள்ளலாம். இது தொடர்பில் முதலமைச்சருடன் பேசி முடிவெடுத்து கொள்வோம்´ என்றார்.
















