வன்னி போன்றே யாழில் சுருட்டிய நகைகளை கையளிக்கவும்! வடக்கு மாகாணசபையில் தீர்மானம்!!

jewelsவன்னியிலிருந்து எடுத்ததாக ஜனாதிபதி கிளிநொச்சியில் கையளித்த நகைகளை போன்றே யாழிலிருந்தும் எடுத்து செல்லப்பட்ட தங்க நகைகளினையும் மீளளிக்க வேண்டுமென வடமாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 1995, 1996 ஆம் ஆண்டுகளில் பொதுமக்களால் இலங்கை வங்கி உள்ளிட்ட வங்கிகளில் அடகுகள் மற்றும் கணக்குகள் வைக்கப்பட்டன. எனினும் நாட்டின் யுத்த சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட நகைகள் மீள திருப்பி மக்களிடம் கொடுக்கப்படவில்லை.

எனவே அவற்றை மீளத்திருப்பிக் கொடுக்க வேண்டும் என அரசிடம் கோருவது தொடர்பான பிரேரணை இன்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண சபையின் 18ஆவது மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது. அதில் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் குறித்த பிரேரணையினை சபையில் முன்வைத்தார். தீர்மானம் குறித்து மேலும் தெரிவிக்கையில், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ வைப்பகம் உள்ளிட்ட வங்கிகளில் பொதுமக்களால் வைக்கப்பட்ட அடகு நகைகளை இராணுவம் மீட்டு கொடுத்துள்ளதாக ஜனாதிபதியினால் வடக்கு விஜயத்தின் போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

எனவே அதுபோல யாழ்.மாவட்டத்தில் பொதுமக்களின் அடகு நகைகள் அரச , தனியார் வங்கிகளால் 1995, 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட நாட்டு சீரின்மையால் ஏற்பட்ட இடப்பெயர்வின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்ட நகைகள் மற்றும் கணக்கு மிகுதிகள் இன்னும் மக்களிடம் திருப்பி வழங்கப்படவில்லை என அறியமுடிகின்றது. அதனையும் மக்களுக்கு வழங்குமாறு இச்சபை கோரிக்கை விடுகின்றதெனவும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply