வட பகுதிக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்லும்போது பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே இது தொடர்பான தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்கள் பத்திரிகைவாயிலாக வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் அந்த இலக்கங்களில் தவறுகள் காணப்பட்ட காரணத்தினால் மீண்டும் அவை திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இதன்படி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பொதுத் தொலைபேசி இலக்கமான 0112430868 அல்லது 0112430875 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பாதுகாப்பு அனுமதி அதிகாரி (எம்.எல்.ஓ.) பிரிவுக்கு மாற்றுமாறு கூறி அங்குள்ள அதிகாரியுடன் தொடர்பு கொள்ளமுடியும்.
அத்துடன் பயணம் தொடர்பான தகவல்களை 0112328109 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்போது பெறுபவர், பாதுகாப்பு அனுமதி அதிகாரி (எம்.எல்.ஓ.) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு என குறிப்பிட்டு அதன்கீழ் பெயர், வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம், பயணம் செய்யும் இடம், காரணம், தங்கும் இடம் மற்றும் தங்கும் காலப்பகுதி, அனுப்புபவரின் பக்ஸ் இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு மேற்கூறிய தொலைநகல் இலக்கம் ஊடாக தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















