யுத்தம் முடிவடைந்த பின்னரும் அதிலிருந்து தமிழ் மக்கள் இன்னும் மீளவில்லை என யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பாரிச வாதத்தினால் ஏற்படும் இறப்புக்களையும், பாதிப்புக்களையும் தடுத்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். எமது பிரதேசத்தில் உளப்பிரச்சினையாலே அதிகமான நோய்கள் ஏற்படுகின்றது.
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் தமிழ் சமூகம் பல்வேறு வகையில் உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்த போதும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் தீர்வு இன்னமும் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் தமிழ் மக்களுடைய மனங்களில் பாரிய பிரச்சினையாக உள்ளது அதுமட்டுமின்றி யுத்தத்தில் ஒரு குடும்பத்தில் பல உறவுகளை இழந்துள்ளார்கள், பலர் காணாமல் போயுள்ளார்கள் இதனால் அவர்களுக்கு என்ன நடந்ததோ என்ற ஏக்கம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் இதன் காரணமாக எமது மக்கள் உள நோய்களுக்கு உள்ளாகின்றனர் உள நோய்களே பாரிய நோய்களுக்கு எல்லாம் காரணமாக அமைக்கின்றது எனவே மேற்கூறப்பட்ட காரணங்களுக்கு தீர்வு கிடைக்கும் பட்சத்திலே எமது பிரதேசத்தில் நோய் தாக்கமற்ற சமுதாயத்தினை உருவாக்க முடியும். எமது மக்கள் நோய்த் தாக்கங்கள் குறித்து அக்கறை இல்லாமல் இருக்கின்றார்கள் இதுவே பாரிய பிரச்சினையாகும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வளமான எதிர்கால சந்ததியினை உருவாக்க வேண்டும் என்றால் நோய் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண மருத்துவச் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
















