தென் கொரிய நாட்டு டி.வி. சீரியல்களைப் பார்த்த வட கொரியாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர்களுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை அதிர்ச்சியான தகவல் ஒன்றை இன்று ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. இதனால் இருநாடுகளிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
வட கொரியாவில் தென் கொரிய நாட்டு திரைப்படங்கள், வீடியோக்கள், மெமரி கார்டுகள் போன்ற பல பொருட்களின் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வடகொரியாவில் தென் கொரிய நாட்டின் எலக்ட்ரானிக் சாதனங்கள் கள்ளச்சந்தையில் அமோகமாக விற்கப்பட்டு வந்தன.
இந்த திருட்டுச் சந்தையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த வடகொரியா தென்கொரியாவின் திரைப்படங்களை பார்த்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்களை பிடித்து அவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதில் ஒருசிலர் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருசிலர் காணாமல் போய் கண்டுபிடிக்காதவர்களின் பட்டியலில் உள்ளதால் அவர்களும் இதே காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதால், வட கொரிய மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதோடு சிலர் அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
















