கொஸ்லாந்த மண்சரிவு: அமெரிக்கா உதவத் தயார் – உதவிகள் தேவையில்லை: அரசாங்கம்

koskantha_mahinda_002கொஸ்லாந்த பகுதியில் நேற்று இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் அமெரிக்கா தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு உதவிக் கரம் நீட்டுவதற்கும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

கொஸ்லாந்த மண்சரிவு தொடர்பில் ஐக்கிய அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை: அரசாங்கம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினதோ அல்லது வேறு தரப்பினரது உதவியோ அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்திற்கு நிவாரண உதவிகளை வழங்க தமது அமைப்பு தயாராக இருப்பதாக ஐ.நா அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஸ்டோஃபன் டுஜிரிக் இன்று காலை வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம் உதவியை கோர வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நாணயக்கார, நான் அறிந்த வரையில் தற்போதைக்கு உதவிகள் அவசியமில்லை.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கத்திற்கு முடியும். சுனாமி போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டால் மாத்திரமே வெளிநாட்டு உதவிகள் தேவைப்படும்.

தற்போது அப்படியான உதவிகள் தேவைப்படாது. இதனை இலங்கையால் சமாளித்து கொள்ள முடியும் என்றார்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு ஜனாதிபதி பரிவாரங்களுடன் விஜயம்- மகிந்த இனவாதி: நந்தன குணதிலக்க

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை பிரதேசத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நேரில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான், விமல் வீரவன்ச உள்பட முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தற்போது ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களின் வருகையை எதிர்பார்த்து காலி முகத்திடலுக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு அமைச்சின் புற்தரையில் இரண்டு வான்படை ஹெலிகெப்டர்கள் வந்து காத்திருப்பதாக ஜனாதிபதி செயலகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் கொஸ்லாந்தை விஜயத்தின்போது மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு ஜனசெவண வீடமைப்புத்திட்டம் ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தில் ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஹெலிகெப்டர் மூலம் நிலச்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பதுளை கொஸ்லந்த ஹல்துமுல்ல –மீரியபெத்த பிரதேசத்தை சென்றடைந்துள்ளார்.

நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து தேடிப்பார்த்து அவர்களுக்கு தேவையான உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

மீரியபெத்த பிரதேசத்தில் உள்ள 120 தோட்ட லயன் வீடுகள் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Tags: , ,

Leave a Reply