இலங்கையில் குடிநீரினால் பரவும் வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல் நோய்களுக்கு யாழ் குடாநாட்டு மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குடிநீரில் கலந்துள்ள நுண்ணுயிர்களே இதற்குக் காரணம் என்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதிஸ்வரன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 9 மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்திலுள்ள அரச வைத்தியசாலைக்கு 554இற்கும் அதிகமானவர்கள் மேற்படி நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழில் இயங்கி வந்த ஐஸ்கிறீம், ஜுஸ் உற்பத்தி நிறுவனங்களுக்கான தடை விதிக்கப்பட்டது சம்மந்தமான கலந்துரையாடல் நேற்று மாலை யாழ்.வணிகர் சங்கத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை முழுவதிலும் குடிநீரினால் அதிகமாக பரவும் வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல் நோய்க்கு உள்ளாக்கப்படுபவர்களில் அதிகமானவர்கள் யாழ்.மாவட்டத்திலேயே அதிகமான உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் நீரில் நுண்ணுயிர் தொற்கு உள்ளது என்பது பல வருடங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது. நிலக்கீழ் நீரினை பாதுகாப்பதற்கான திட்டங்கள் பல வகுக்கப்பட்டும் உள்ளது. இதில் சில நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.
யாழில் சகல பகுதிகளிலும் உள்ள கிணறுகளில் உள்ள நீரை எடுத்து பரிசீலித்துப் பார்த்தால் அதில் திருப்தி இல்லாத முடிவே கிடைக்கும்.
கடந்த 2013 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் வயிற்றோட்டம் காரணமாக 489 நோயாளர்களும், நெருப்புக் காய்ச்சல் காரணமாக 350 பேரும் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
கடந்த 9 மாதத்திற்குள்ளும் வயிற்றோட்டம் காரணமாக 261 நோயாளர்களும், நெருப்புக் காய்ச்சல் காரணமாக 293 நோயாளர்களும் இதுவரையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேற்படி நோய் தொற்றுக்கு உள்ளாக்கப்படுபவர்களுடைய தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது.
அசைவ உணவில் பல்லி, சைவ உணவில் ஆட்டெலும்பு: வட மாகாண சுகாதார அமைச்சர்
யாழில் உள்ள பல உணவகங்கள் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்குவதாக தெரிவித்த் வடமாகாண சுகாதார அமைச்சர், அசைவ உணவில் பல்லியும், சைவ உணவில் ஆட்டெலும்பும் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
யாழில் இயங்கிவந்த ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிறுவனத்திற்கு திடீர் தடை விதிக்கப்பட்டமை தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை யாழ்.மாணிப்பாய் வீதியில் அமைந்துள்ள யாழ்.வணிகர் சங்கத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகைதந்த போது உணவகம் ஒன்றிற்கு உணவருந்துவதற்காக சென்றிருந்தேன். அங்கு நான் அருந்திய உணவில் பல்லி ஒன்று உயிரிழந்து கிடப்பதை அவதானித்திருந்தேன்.
அதே போன்று வேறொரு நாள் சைவ உணவு உண்பதற்கு ஆசைப்பட்டு சைவ உணவகத்திற்கு சென்று உணவருந்திக் கொண்டிருக்கும் போது, அங்கு எனக்கு கொடுக்கப்பட்ட சைவ உணவில் ஆட்டு எலும்புக் கறி வாசத்தை என்னால் நுகர முடிந்தது.
அதே போன்று என்னுடன் வந்த இன்னுமொருவருக்கு ஆட்டுக் கறி உண்டால் அவருக்கு ஒவ்வாமை வருவதுண்டு. குறித்த உணவகத்தில் உணவருந்தி விட்டு வெளியில் வருவதற்கு முன்பே அவருடைய முகத்தில் மாற்றம் தெரிந்ததையும் என்னால் அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் குறித்த உணவகத்தின் உரிமையாளரிடம் முறையிட்ட போது அவர் அதனை ஏற்க மறுத்திருந்தார்.
இந்த நிலையில் உள்ளன யாழ்ப்பாண உணவகங்கள். இதனால் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து நான் 5 நாட்கள் தங்குவதாக இருந்தாலும், 3 வேளையும் பாணை மட்டுமே பதப்படுத்தி உண்ணுகின்றேன் என்றும் அமைச்சர் தனது கவலையினை வெளியிட்டிருந்தார்.
















