ஜனாதிபதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கோடிக்கணக்கான பணம் விரயம்- ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானித்துள்ள அரசாங்கம்

mahindanew_CIஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் விரயம் செய்யப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பு டுடே செய்திச் சேவையை மேற்கோள்காட்டி சிங்கள இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதியின் பிறந்தநாள் ஆகும்.

இதற்காக அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விளம்பரங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிட சுமார் 26 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.

தமிழ், சிங்களம், ஆகிய மொழிகளில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்படவுள்ளது.

இதற்காக நாளாந்த பத்திரிகைகளில் விசேட இணைப்பிதழ்கள் வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அனைத்து திணைக்களங்கள் மற்றும் அதிகார சபைகள், கூட்டுத்தாபனங்கள் என்பவற்றின் சார்பில் குறித்த பிறந்த நாள் வாழ்த்து விளம்பரங்கள் வெளியிடப்படவுள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை முன்வைத்து இந்த விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதில் கடும் பொருளாதார நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசாங்க அச்சு ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் மட்டுமே ஐந்து கோடி ரூபாய் செலவழிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு: ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானித்துள்ள அரசாங்கம்

மகிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் மீதமிருக்கும் நிலையில், சட்டவிரோதமாக எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் அவசர ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை அறிவிக்க தயாராகி வந்த நிலையில், தற்போது இந்த தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருவதற்கு எதிராக ஜே.வி.பி தலைமையில், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் பொது அமைப்புகள் இணைந்து நாடு முழுவதும் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.

இந்த பிரசாரக் கூட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் பிரதிநிதிகளும், கட்சிகளும், குழுக்களும் கலந்து கொண்டு வருகின்றமை அரசாங்கத்திற்குள் பரப்பரப்பாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கவோ, அதில் போட்டியிடவோ எவ்விதமான சட்டரீதியான வாய்ப்புகளும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாது ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தினால், அவரை தோற்கடிக்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிராக நாட்டில் இப்படியான சூழ்நிலை உருவாகியுள்ளதால், அரசாங்கம் அண்மையில் இரகசியமான கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட பிரபல நிலை வெகுவாக குறைந்துள்ளதுடன் அவருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளமை இந்த கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால், குழம்பிபோயுள்ள அரசாங்கம், ஜனாதிபதித் தேர்தலுக்கான தயார்ப்படுத்தலை அவசரமாக ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Tags: , ,

Leave a Reply