இலங்கையின் பொருளாதார முதுகெலும்பான மக்களுக்கு ஏற்பட்ட அவல நேரத்தில் களியாட்ட பெருவிழா தேவையா? மலையகத்தில் பதுளை ஹல்துமுல்ல, கொஸ்லந்த, மீரியாப்பெத்த மற்றும் மலையகப் பகுதிகளில் 29.10.2014 முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் 120 வீடுகளைக் கொண்ட 7லயன் வீட்டுத்தொகுதிகள். ஒரு கோயில், 5 உத்தியோகத்தர் இல்லங்கள், 3 வர்த்தக நிலையங்கள், ஒரு மைதானம் என்பன முற்றாக புதையுண்டன. இதில் சுமார் 400 பேர்வரை காணாமல் போயுள்ளனர். இவர்கள் மண்சரிவு அனர்த்தத்தில் அகப்பட்டு இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அரச மற்றும் அரச அதிகாரிகளின் அசண்டையினத்தினால் ஏற்பட்ட இந்த கொடுர அனர்த்தத்தில் காணமால் போனவர்களை அல்லது இறந்தவர்களின் உடல்களைக் முற்றாக கண்டுபிடிக்காத இத்தருணத்தில் நாடே சோகத்திலிருக்கும் இவ்வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் மாகாணசபையின் ஏற்பாட்டில் நடக்கும் வடமாகாண பண்பாட்டு பெருவிழா என்ற களியாட்டம் பிற்போடாமல் அல்லது நிறுத்தி வைக்காமல் நடத்துவதை சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறது.
நாட்டில் சகல பகுதிகளும் இச் சோகத்தில் சூழ்ந்திருக்கும் போது இவ் நிகழ்சி கட்டாயமானதா என்ற கேள்வியே? நாம் தமிழ் தேசியம் பேசி வாக்கு கேட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களிடம் கேட்டு நிற்கின்றோம். இலங்கையில் முதுகெலும்பான மலையக வாழ் தமிழர்களின் இவ் இழப்பை இன்னொரு தமிழர்களின் அடையாளமான வடமாகணசபை இக் களியாட்டத்தை நிறுத்தி இவ் நிகழ்ச்சிக்காக செலவளிக்கின்ற மில்லியன் கணக்கான பணத்தை அவ் மக்களின் மீள் கட்டுமானத்துக்கு கொடுத்திருந்தால் அது பெரும் மதிப்புக்குரிய விடயமாக இருக்கும் என்று நாம் கருதுகின்றோம்.
இவ் நிகழ்ச்சி ஏற்கனவே நிச்சயிக்கப்படடு ஏற்பாடுகள் முடிந்துவிட்டன அதனால் ஒன்றும் செய்யமுடியாது என்று கதை சொல்லி சமாளிக்கவோ? அல்லது சமாதானம் செய்யவோ முடியாது. என்னென்றால் இந்த நிகழ்ச்சி ஏற்கனவே ஒரு முறை ஜனாதிபதி வட மகாணத்துக்கான விஜயத்துக்காக பிற்போடப்பட்டதை நாம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
எமது இரத்த சொந்தங்கள் அனர்த்தத்தில் மூழ்கி இருக்கின்ற வேலையில் இக் களியாட்ட நிகழ்வு நடத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
வந்தாரை வாழ வைத்த இடமான வன்னியில் வாக்கு கேட்டு வென்ற தமிழ் அரசியல்வாதிகள் வவுனியாவில் இந் நிகழ்ச்சி நடப்பதற்கு எதிராக ஏன் எதிர்ப்பு காட்டவில்லை.
எனவே இந் நிகழ்ச்சியை நடத்தும் மாகாணசபை நிர்வாகம் மற்றும் கலந்துக் கொள்ளும் முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு எதிர்ப்பையும் பதிவு செய்து கொள்ளுகிறோம்.
உண்மையான உள்ளங்கள் இந் நிகழ்வை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
















