மீறியபெத்தை மண்சரிவில் 31 பேர் மாத்திரமே காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீறியபெத்தை அவலத்தின் போது அரசாங்கம் வெளிநாட்டு நிவாரணம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கவில்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்க நிதியில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீறியபெத்தை மண்சரிவில் 63 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 31 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பெற்றோரை இழந்த குழந்தைகள் மூன்றும் தாயை மட்டும் இழந்த குழந்தைகள் நான்குமே இருக்கின்றது. விபத்தின்பின் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களை உயர்தர கல்விவரை அழைத்துச் செல்ல அரசாங்கம் பொறுப்பெடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் 7575 பேர் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மக்கள் அரசாங்கத்திற்கு சுமை அல்ல. இதேவேளை, மண்சரிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை வட மாகாண சபை பொறுப்பேற்க கோரிக்கை முன்வைத்துள்ளது. புலிகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அங்கு இருக்கும் நிலையில் மீறியபெத்தை மக்களை பொறுப்பேற்கக் கோருவது அவர்களின் பொய்யான நிலையை எடுத்துக் காட்டுவதால் சிறுவர்களை பொறுப்பளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் . மீறியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு முகாம்களில் உள்ள மக்களை பார்வையிட ஊடகவியலாளர்கள், அரசியல்தலைவர்கள், இராணுவத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களை தவிர ஏனையவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை மீறியபெத்தை மண்சரிவில் நூற்றுக்கு அதிகமானோர் காணமல் போயுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















