ஜனாதிபதி தேர்தலை வைத்து கூட்டமைப்பு பேரம் பேச வேண்டும்: பிரபா கணேசன்

election_CIவிடுதலைப் புலிகள் தமக்கு கிடைத்த பல பேரம் பேசும் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டார்கள். அது அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இந்த ஜனாதிபதி தேர்தல் பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது அபிலாஷைகளை வென்றெடுப்பார்கள் என்று வடக்கு தமிழர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இதனை உணர்ந்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சரியான முன் நடவடிக்கைகளை எடுப்பார் என நான் எதிர்ப்பார்க்கின்றேன்.

மேலும், கொஸ்லாந்த மண்சரிவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நேரடியாக சென்று பார்வையிட்ட தமிழ் கூட்டமைப்பு குழுவினருக்கு எனது மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்திய வம்சாவளி மலைநாட்டு தமிழர்களுக்காக இவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு நான் தலை வணங்குகின்றேன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் ஆதரவினை அதிகமாகப் பெற்று ஜனாதிபதி மீண்டும் ஆட்சி அமைக்கப் போகின்றார்.

இத்தருணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமக்கு வடகிழக்கு தமிழ் மக்கள் வழங்கும் வாக்குகளை வைத்து தமக்கு தேவையான அதிகாரப் பரவலாக்கலை ஜனாதிபதி மூலமாக பெற்றுக் கொள்ளக் கூடிய இறுதி சந்தர்ப்பமாகும்.

இவ் இறுதி சந்தர்ப்பத்தையும் தவறவிட்டால் விடுதலைப் புலிகள் விட்ட அதே தவறை மீண்டும் இவர்களும் செய்யப் போகின்றார்கள்.

தமிழ் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமா அல்லது தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேரினவாத சக்தியை வீட்டுக் அனுப்பி விட்டு மீண்டுமொரு பேரினவாத சக்தியை ஆட்சியில் அமர்த்த வேண்டிய பொறுப்பையா வடகிழக்கு தமிழர்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

இதனை மனதில் எடுத்துக் கொண்டு இச்சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிபந்தனையின் பெயரில் இராணுவத்தை தாயக பூமியிலிருந்து அகற்றி, ஆளுநராக சிவில் சமூக சேவையினர் ஒருவரை நியமித்து, வட மாகாணத்திற்கான அதிகாரங்களை பெற்றுக் கொள்ளல், சிங்கள குடியேற்றத்தை தவிர்த்தல், அபிவிருத்திக்கு மேலதிக நிதியினைப் பெற்றுக் கொள்ளல், மொழி அமுலாக்கல்,போன்ற பல விடயங்களை வைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு அளிப்பது சம்பந்தமாக பேரம் பேச வேண்டிய கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட வேண்டும் என்பது எனது எதிர்ப்பார்ப்பாகும்.

கிளையில் இருக்கும் கிளியைவிட கையில் இருக்கும் காகமே மேலானது என்பதை போல் இனிவர முடியாத புதிய ஒருவரை நம்பிக் கொண்டிருக்காமல் இப்போது இருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை நம்பி செயல்படுவது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மட்டுமல்லாது வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் நன்மை பயப்பதாகவே இருக்கும்.

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு பொறுப்பாளர்களில் ஒருவரான சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க சொன்ன கூட்டமைப்பினர் மீண்டும் இத்தவறைச் செய்துவிடக் கூடாது. ஜனாதிபதிக்கும் இவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முன்னெடுக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.

Tags: , ,

Leave a Reply