எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக கருதப்படும் நிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 56 லட்சம் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஸவுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை இம் மாதம் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் மேல் மாகாண சபை உறுப்பினரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராட்சி உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் செயலாளர் ஜெகத் புஸ்பகுமார பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (31) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமுர்த்தி வேலை ஜனாதிபதி மஹிந்தவால் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் இந்த வேலை கூட இல்லாமல் போகும். அதனால் எமக்கு தொழில் தந்து எம்மை வாழ வைத்த ஜனாதிபதி மஹிந்தவை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதன் மூலமே எமது வேலை நிலைக்கும். அதற்காக இந்த நவம்பர் மாதத்தை நாடு பூராகவும் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு சமுர்த்தி உத்தியோகத்தர்களும் சிறு குழுக் குழுவாக உங்கள் பகுதியில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும். அவர்களிடம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களிககுமாறு அறிவிவுறுத்துவதுடன் அவர்களின் பெயர், விலாசம், கையொப்பம் என்பவற்றை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வேலைகள் இந்த மாதத்திற்குள் பூர்த்தியாக்கப்பட வேண்டும். இதன் மூலம் 28 லட்சம் பேர் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களிக்க முடியும். அவர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள இன்னொருவரை மஹிந்தவுக்கு வாக்களிக்க செய்யும் போது 56 லட்சம் பேர் ஜனாதிபதி மஹிந்தவுக்காக வாக்க முடியும். இதன் மூலம் அவரின் வெற்றி உறுதியாகும் எனவும் தெரிவித்தார்.
















