யாழ்ப்பாணத்து மாணவர்களின் நிலைமை தற்போது பெரும் சிக்கலான நிலைமையைத்
தோற்றுவித்துள்ளது எனலாம். அதாவது காலையில் பாடசாலைக்குச் செல்லும் போது புத்தகங்களுடன் கத்தி, வாள் போன்றவற்றை எடுத்துச் செல்வதும், பின்னர் பாடசாலை முடிந்து மாலையில் மதுபானசாலையில் முண்டியத்துக் கொண்டு நிற்பது என்பதுடன், கலாசாரச் சீரழிவுகளிலும் ஈடுபடுதல்.
இவ்வாறு எமது இளம் சமுதாயம் ஒரு தொடர் கதையாகச் செல்லுமாக இருந்தால் எம்மினத்தின் சந்ததி அழிந்து வரும் பரிதாப நிலையை யாராலும் தடுக்க முடியாது போய் விடும்.
கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்கள் என்றால் மரியாதையும், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறையும் எமது மக்கள் மத்தியில் இருந்தது. இன்று இவை எல்லாம் மாறி மனதில் ஒருவித அச்ச நிலையை தோற்றுவிக்கும் அளவுக்கு எமது பாடசாலை மாணவர்கள் நடந்து கொள்கின்றனர்.
கையில் பேனா எடுத்து காகிதத்தில் பரீட்சை எழுதிப் பட்டம் பெற்று ஊர்போற்ற வாழ வேண்டும் என நினைத்துப் பாடசாலை அனுப்பி வைக்கும் பெற்றோர்களுக்கு இம் மாணவர்கள் கொடுக்கும் பரிசு, கோஷ்டி மோதலில் காயப்பட்டு மருத்துவமனைக்குச் செல்வதுதான்.
இதேவேளை இவ்வாறான மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை உருவாக்கி அவர்களின் கல்வி, எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு வோறொரு சக்தி ஒன்று இயங்குகின்றதா என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.
எனவே இவ்வாறானதொரு சக்தி இருக்குமிடத்து அதனை உடனடியாக வேரறுப்பதற்கு சாதாரண மக்கள் முதல் காவல்துறை வரை கவனம் செலுத்துவது, யாழ்ப்பாண மாணவர்களின் எதிர்காலத்தை திடப்படுத்துவதற்கு, உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவாக அமையும்.
இல்லையேல், எம்மினத்தின் எதிர்கால சந்ததி அழிவுப் பாதையை நோக்கி அதாளபாதாளத்துக்குள் செல்லும் நிலையை யாராலும் தடுக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையைத் தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
















