துக்ககரமான ஒரு சம்பவத்துடன் வடக்குக்கும் மலையகத்துக்குமான உறவுப்பாலமொன்று
ஏற்பட்டிருக்கிறது என்று, கடந்த வாரம் பாரிய மண்சரிவுக்குள்ளான பதுளை, கொஸ்லந்தை, மீரியாபெத்த பிரதேசத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முதலில், சம்பவ இடத்துக்குச் சென்ற விக்னேஸ்வரன் தலைமையிலான குழு, பின்னர் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள பூனாகலை கணேஷ வித்தியாலயத்துக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன்பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த மண்சரிவால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் தங்கவைத்து கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்த விக்னேஸ்வரன், அவர்கள் விரும்பினால், கொழும்பில் கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
வாக்கு கேட்பதற்காக மட்டுமே இந்த மக்களைத் தேடிச் செல்லும் அரசியல்வாதிகள், இம்மக்களின் நலன் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறான அபாயங்கள உள்ள பிரதேசங்களைக் கண்டறிந்து, அங்குள்ள மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய இந்த அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது, இவ்வாறான பிரச்சினைகளுக்கு மலையக மக்கள் முகங்கொடுக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜாதி, மத, இன பேதமின்றி, அனைத்து மக்களும் ஒன்றுபட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு தமிழ், சிங்களம், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவம் என்று பேதமில்லாமல் அனைவரும் தங்களாலான உதவிகளை வழங்கி வருகின்றனர். இது இந்த நாட்டின் ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
நடந்தது துக்ககரமான விடயமாக இருந்தாலும் இதனை நாம் அனைவரும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில், இவ்வாறானதொரு அசம்பாவிதம் ஏற்படாதிருக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.
இந்த கள விஜயத்தில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலுகுமார், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
















