பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஐ’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு மற்றும் நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், அதனால் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் செய்ய பணம் இல்லாததால்தான் படத்தின் ரிலீஸ் தாமதமாகிறது என்று தகவல்கள் வெளிவருகின்றன.
‘ஐ’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் நவம்பர், டிசம்பர் என மாறி மாறி அறிவித்து தற்போது பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகின்றது.
தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இதுவரை தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் இந்த படத்தில் முதலீடு செய்துள்ளதால் அவருடைய எதிர்காலம் இந்த படத்தின் வெற்றியை பொறுத்தே உள்ளது என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
















