ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பிரதானி மங்கள சமரவீர அக்கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வின் ஆதரவோடு பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர் கடுமையாக போராடியிருந்தார். அதன் ஊடாகவே மஹிந்த ராஜபக்ஷவின் அராஜகத்துக்கு முடிவு கட்ட முடியும் என்பது மங்களவின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
எனினும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தானே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து பொது வேட்பாளர் விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
எனினும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால் ஐ.தே.க.வின் தோல்வி உறுதி என்பது மாத்திரமன்றி கட்சியின் தலைமைப் பதவியும் ரணிலிடமிருந்து பறிபோய் விடும் என்று மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் கட்சித் தலைமைப்பொறுப்புக்கு சஜித் பிரேமதாச வரும் வாய்ப்பிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் மங்கள சமரவீர தான் தொடர்ந்தும் ஐ.தே.க.வில் இருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகின்றது. இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் ஆளுங்கட்சியுடன் இணைவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மங்கள சமரவீரவை ஆளும் கட்சிக்கு இழுத்து வந்து முக்கிய அமைச்சுப் பதவியை வழங்கவும் ஆளுங்கட்சி தயாராக உள்ளது. எனினும் அவ்வாறு ஆளுங்கட்சியில் இணையும் பட்சத்திலும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுப்பதில்லை என்று மங்கள சமரவீர முடிவெடுத்துள்ளார்.
அவ்வாறில்லாத பட்சத்தில் அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிடவும் அவர் முடிவெடுத்துள்ளார்.
அதே நேரத்தில் சர்வதேச அமைப்பொன்றின் முக்கிய பதவியொன்றும் மங்கள சமரவீரவுக்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாக இருந்தாலும் எதிர்வரும் நாட்களில் அவர் முக்கியமான முடிவொன்றை எடுப்பது உறுதி என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
















