தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் புரிந்தமை குறித்து பேசவில்லை, மக்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியே பேசுகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய சம்பந்தன், வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. எனினும், மாகாணசபையின் அரசியல்வாதிகளுக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை.
இடம்பெயர் மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. ராணுவத்தினர் வடக்கு தமிழ் மக்களின் நிலங்களை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவினர் இலங்கைக்கு வர அனுமதிக்காமை காரணமாக அவர்களுக்கு உண்மைத் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் புரிந்தமை குறித்து நாம் பேசவில்லை. சிவில் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியே நாம் குறிப்பிடுகின்றோம்.
போரின் பின்னர் இலங்கையில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படாமை காரணமாகவே ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச விசாரணைகளை நடத்துகின்றன. சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
















