‘கதைக் களவாணி’ ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படம் 100 கோடி வசூல் செய்திருப்பதாக ஒரு தகவலை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
இதை ‘கதைக்களவாணி’ ஏ.ஆர்.முருகதாஸும், இசையமைப்பாளர் அனிருத்தும் ட்விட்டரில் மாறிமாறி கூவிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் மூலம் ரஜினியைவிட விஜய்தான் ‘மாஸ் ஹீரோ’ என்ற பொய்யை ஸ்தாபிக்கவும், அப்பொய்யை நம்ப வைக்கவும் முயற்சி செய்கின்றனர்.
”கத்தி படம் 100 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய்..!
– என்று திரைப்படத்துறையில் பல வருடம் அனுபவம் உள்ள தயாரிப்பாளர்களே பல புள்ளிவிரங்களுடன் மறுக்கின்றனர்.
உதாரணமாக 100 கோடி வசூலில் கணிசமான தொகை வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களில் வசூலித்ததாக ‘கணக்கு’ காட்டுகிறார்கள்.
வெளிநாட்டு வசூலில் ‘விளையாடுகிறார்கள்’ என்பது விவரமறிந்தவர்களின் குற்றச்சாட்டு.
இதற்கிடையில் கத்தி படத்தைத் தயாரித்த லைகா புரடக்ஷன்ஸுக்கு சுமார் 12 கோடியில் இருந்து 15 கோடி வரை நஷ்டம் என்ற தகவலும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து நமக்குக் கிடைத்தது.
திரையரங்குகளில் படங்களை சதவிகித அடிப்படையில்தான் திரையிட்டு வருகின்றனர்.
முதல் வாரம், தியேட்டர்காரர்களுக்கு 30 சதவிகிதம் – விநியோகஸ்தர்களுக்கு 70 சதவிகிதம், 2வது வாரம், தியேட்டர்காரர்களுக்கு 35 சதவிகிதம் – விநியோகஸ்தர்களுக்கு 65 சதவிகிதம், 3வது வாரம், தியேட்டர்காரர்களுக்கு 40 சதவிகிதம் – விநியோகஸ்தர்களுக்கு 60 சதவிகிதம், என்ற அடிப்படையில் வசூலான தொகையை பங்கு போட்டுக்கொள்வார்கள்.
இப்படி கிடைக்கும் பங்குத்தொகையை ‘ஷேர்’ என்பார்கள்.
கத்தி படத்தின் வசூலில் தியேட்டர்காரர்களின் ஷேர் போக, தயாரிப்பாளருக்கு கிடைத்த ஷேர் அடிப்படையில் பார்த்தால்….
கத்தி படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் செலவு செய்த தொகை கைக்கு வரவில்லை என்கிறார்கள்.
இன்றைய தேதிக்கு சுமார் 12 கோடியில் இருந்து 15 கோடி வரை நஷ்டம் உறுதி என்று சொல்கிறார்கள் விவரமறிந்த விநியோகஸ்தர்கள்.
கத்தி படத்தின் தயாரிப்பாளரான ‘லைகா புரடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் அல்லிராஜா, ராஜபக்சேவின் நண்பர் என்ற சர்ச்சையில் சிக்கினார்.
எனவே கத்தி படம் வெளிவருவதே சந்தேகம் என்று சொல்லப்பட்டது.
அப்போது, கத்தி படத்தின் பட்ஜெட் லைகாவின் இரண்டு நாள் வருமானம் என்று நக்கலாக கருத்து தெரிவித்தார் சுபாஸ்கரன்.
அதனடிப்படையில், தற்போது கத்தி படத்தினால் ஏற்பட்ட 15 கோடி நஷ்டம் சுபாஸ்கரனுக்கு பெரிய தொகை இல்லை, பெரிய விஷயமுமில்லைதான்.
என்றாலும், ”நம்மை நம்பி முதலீடு செய்த சுபாஸ்கரனுக்கு கத்தி கையைக் கீறிவிட்டதே” என்ற கடும் மன வருத்தத்தில் இருக்கிறார் ஐங்கரண் கருணாமூர்த்தி.
















